தமிழ்நாடு

சிந்து சமவெளி கண்டுபிடிப்பின் 100ம் ஆண்டு.. சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சிந்துவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த சர் ஜான் மார்ஷலுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சென்னையில் உருவச்சிலை அமைக்கப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிந்து சமவெளி கண்டுபிடிப்பின் 100ம் ஆண்டு.. சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
Chief Minister MK Stalin

சென்னை:  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வுக் கழத்தின் டைரக்டர் ஜெனரல் ஆக இருந்தவர் சர் ஜான் மார்ஷல். இவர் 1924ம் ஆண்டு சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டறிந்து அதன் ஆய்வறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருப்பதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளதாக பல்வேறு ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வுகளும் மேற்கொண்டு வருகின்றனர். 

சிந்து சமவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த சர் ஜான் மார்ஷலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘’சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 20 செப்டம்பர் 1924 அன்று, சர் ஜான் மார்ஷல் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். இதனை நான் நன்றியுடன் திரும்பிப் பார்த்து, அவருக்கு கூறுகிறேன். அவரின் கண்டுபிடிப்பால் இந்திய துணைக்கண்ட வரலாறே மாற்றியமைக்கப்பட்டது. 

சிந்துசமவெளி நாகரிகத்தின் கலாசாரத்தை அறிந்து கொண்டு அதனை திராவிட நாகரிகத்துடன் தொடர்புபடுத்தி இணைத்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு நடத்தி, சர் ஜான் மார்ஷலின் உருவ சிலையை தமிழகத்தில் நிறுவப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

சிந்துவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த  சர் ஜான் மார்ஷலுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சென்னையில் உருவச்சிலை அமைக்கப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.