தமிழ்நாடு

வீடு தேடி வரும் ரேஷன் பொருள்.. தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் காணொளி வெளியீடு!

இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வீடு தேடி வரும் ரேஷன் பொருள்.. தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் காணொளி வெளியீடு!
Chief Minister Stalin Launches 'Thayumanavar Thittam' to Deliver Ration Goods to Homes of the Elderly and Disabled
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ’முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை’ இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதுத்தொடர்பாக காணொளி ஒன்றினை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு-

என் மனதுக்கு பிடித்த திட்டம்:

”நம்ம திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்திட்டு இருக்கிறோம். அந்த வரிசையில என் மனசுக்குப் பிடித்த திட்டமா உருவாகி இருக்கிறது தான் தாயுமானவர் திட்டம். கூட்டுறவு துறை சார்பில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குகிற தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்படி அரசோட சேவைகளை மக்களுடைய வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுக்கிறது இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி.
ஒரு திட்டத்தை அறிவிக்கிறதோட கடமை முடிஞ்சிடுதா நாம நினைக்கவில்லை. அந்த திட்டத்தோட பலன் பயன் கடைக்கோடி மனிதரையும் சென்று சேருதான்னு கண்காணிக்கிறதையும் கடமையா நினைக்கிறேன்.

அப்படி வயது முதிர்ந்தோரும் மாற்றுத் திறனாளிகளும் ரேஷன் கடைகளுக்கு போய் பொருட்களை வாங்குவதில் ஏற்படுகிற சிரமத்தை உணர்ந்து இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த திட்டத்தை 34,809 நியாய விலை கடைகளில் செயல்படுத்தப் போகிறோம். 70 வயதுக்கு மேற்பட்ட 20,42,657 மூத்த குடிமக்களும், 1,27,797 மாற்றுத் திறனாளிகளும் மொத்தம் 21,70,454 பேர் இந்த திட்டத்தால் பயன் அடையப் போகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் குடிமைப் பொருட்கள் உங்கள் வீடு தேடிவரும். இதற்காக கூட்டுறவு துறைக்கு ஆகப்போகும் 30 கோடியே 14 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாக கருதாமல் மக்களுக்கு செய்கிற உயிர்காக்கும் கடமையா நாங்கள் நினைக்கிறோம்”

பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழ்நாடு:

”கூட்டுறவு துறையின் அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப்போகிற மிகப்பெரிய கடமை. தமிழ்நாடு முழுக்க 37,328 நியாய விலை கடைகள் உள்ளன. இதில் கடந்த நான்காண்டுகளில் மட்டும் 2,394 புதிய நியாய விலை கடைகளை திறந்திருக்கிறோம்.

கலைஞர் வழியில் இந்த நியாய விலை கடைகளை நாம முறையாக, சிறப்பாக நடத்துவதால் தான் தமிழ்நாடு இன்று பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக உள்ளது. இந்த ரேஷன் கடைகளின் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்க முயற்சிகள் எடுத்திருக்கிறோம்.

இந்த நேரத்தில் கூட்டுறவு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள். இந்த திட்டத்தின் நோக்கம் 100% நிறைவேறும் வகையில் உங்களுடைய பணி அமைய வேண்டும். உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிற முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் மனம் குளிரும் வகையில் நீங்களும் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் வாங்கும் நல்ல பெயர்தான், ஆட்சிக்கு கிடைக்கும் பாராட்டு” என பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.