இன்றைய சமூக சூழல் மாற்றத்தில் பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் வயது அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் பதின் பருவத்திலேயே பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இதனைத் தடுக்க பெண்ணின் திருமண வயதை 21 ஆக அரசு நிர்ணயித்திருக்கிறது. இன்றைக்கு பெண்கள் கல்வி பெற்று, பணிக்குச் செல்வது அவர்களை சுயசார்புடன் வாழ வழி செய்கிறது. தனது வேலையில் பல உயரங்களை அடைய வேண்டி முழு மூச்சுடன் உழைக்கிறவர்கள் திருமணத்தைத் தள்ளிப் போடுகின்றனர். வயது வெறும் எண் மட்டுமே என்று என்னதான் நாம் சொல்லிக்கொண்டாலும் வயது ஆக ஆக உடல் மாறிக் கொண்டுதான் இருக்கும். அப்படியாக 30 வயதைக் கடந்து விட்டாலே கருமுட்டை பலவீனம் ஆகி விடும் என்பதால் அதற்கு முன்னதாகவே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து விரிவாக விளக்குகிறார் பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நிவேதிதா காமராஜ்...
“மருத்துவத் துறையைப் பொருத்தவரை ஒவ்வொன்றுக்கும் அதனதற்கான வயது என ஒரு கணக்கு இருக்கிறது. அந்தந்த வயதில்தான் அதைச் செய்ய வேண்டும். ஒரு பெண் பிறக்கும்போதே 2 மில்லியன் கருமுட்டைகளுடன் தான் பிறக்கிறாள். மாதவிடாய் சுழற்சியின்போது அந்தக் கருமுட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி விடும் என்பதால் வயது ஆக ஆக கருமுட்டைகளின் எண்ணிக்கை குறையும். அது மட்டுமில்லாமல் கருவின் தரமும் குறையும். இதனால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பதில் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால்தான் அந்தந்த வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்கிறோம்.
பெண்ணின் திருமண வயது 21 என அரசு நிர்ணயித்திருக்கிறது. உடலளவிலும், மனதளவிலும் குழந்தையை சுமக்க இந்த வயது தேவை. 21 வயதில் இருந்து 28 வயதுதான் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சரியான வயது என்று சொல்லலாம். அதற்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாதா என்றால் முடிந்த வரை காலத்தைத் தள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 30 வயதுக்கு மேல் இயல்பாகவே உடலில் பல மாற்றங்கள் நிகழும். தைராய்டு, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இது பிரசவத்தை மேலும் பிரச்னைக்குரியதாக ஆக்கும்.
கருத்தரித்தல் என்பது ஹார்மோன்களின் செயல்பாடு. பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோன் மற்றும் பெண் ஹார்மோன் ஆகியவை சரியான சுழற்சியில் இருந்தால்தான் கருமுட்டையின் தரம் நன்றாக இருக்கும். 30 வயதுக்கு மேல் இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டிலும் சுணக்கம் ஏற்படும். இல்லை குழந்தை பெற்றுக் கொள்வதற்கு நீண்ட காலமாகும் என்று நினைக்கிறவர்கள் முன்னரே கருமுட்டையைப் பதப்படுத்தி வைத்துக் கொண்டு எப்போது தேவையோ அப்போது செய்ற்கை கருவுருதல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். 25 வயதில் கருமுட்டையை நீங்கள் பதப்படுத்தி வைக்கிறீர்கள் என்றால் 10 ஆண்டுகள் கழிந்தாலும் அந்த முட்டைகள் அதே 25 வயதிலேயேதான் இருக்கும்.
30 வயதுக்கு மேல் கருவுறுதலே கூடாதா என்றால் இல்லை. அதில் சவால்கள் நிறைய இருக்கிறது என்பதை உணர வேண்டும். அந்த சவால்களை எதிர்கொள்ளுமளவு உடலைத் தயாராக்க வேண்டும். சத்தான உணவுகள் உட்கொள்வதன் மூலமும், போதுமான உடற்பயிற்சிகள் மூலமும்தான் உடலைத் தயாராக்க வேண்டும். மருத்துவர் வழிகாட்டுதலோடு குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இருந்தாலும், 28 வயதுக்குள்ளாக குழந்தை பெற்றுக் கொள்வதுதான் தாய் - சேய் இருவரது ஆரோக்கியத்துக்கும் உகந்தது.” என்கிறார் நிவேதிதா காமராஜ்.
- கி.ச.திலீபன்