தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு வாக்குவாதம்!

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு வாக்குவாதம்!
Argument over Minister Moorthy
மதுரை அவனியாபுரத்தில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காரணம் என்ன?

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆண்டுதோறும் கிராம கமிட்டி குழுவினர் மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் என இருதரப்பினர் நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டுப் போட்டியை யார் நடத்துவது என்பதில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மோதல் நீடித்து வந்தது. இது தொடர்பாக, கடந்த மாதம் 30ஆம் தேதி பேச்சுவார்த்தை நடந்த போதும் திடீரென மோதல் வெடித்தது.

அமைச்சர் மூர்த்தியுடன் வாக்குவாதம்

இந்தச் சூழலில், இன்று காலை (ஜனவரி 5) மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டபோது, அங்கிருந்த ஒரு தரப்பினர் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

"ஒருதலைப்பட்சமாக விழா நடத்தப்படுகிறது" என்றும், "முகூர்த்தக்கால் நடும் விழாவுக்கு அனைத்து சமூக மக்களையும் அழைக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தி பொதுமக்கள் அமைச்சர் மூர்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் மூர்த்தியின் விளக்கம்

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, "நீதிமன்ற ஆணையைப் பின்பற்றியே அரசு இந்த விழாவை நடத்துகிறது. இதில் எந்தவிதமான பாரபட்சமும் இல்லை. ஆண்டுதோறும் அனைத்துத் தரப்பினரையும் அழைத்தே விழா நடத்தப்படுகிறது" என்று விளக்கமளித்தார். அங்கிருந்த அதிகாரிகளும் பொதுமக்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.