தமிழ்நாடு

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு.. நகைத் திருட்டு புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு!

காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்குக்கு தொடர்புடைய நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு.. நகைத் திருட்டு புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு!
CBI registers case on jewellery theft complaint
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

காவலாளி கொலை - நடவடிக்கை

கடந்த ஜூன் 27-ஆம் தேதி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா, தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாகத் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், கோயிலின் காவலாளியான அஜித்குமாரை மானாமதுரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனிப் படை காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

நகை திருட்டு புகார்- நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கை சிபிசிஐடி சிசாரித்து வந்த நிலையில், சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சிபிஐ வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், "உண்மையிலேயே பேராசிரியை நிகிதாவிடம் இருந்து நகை திருட்டு போனதா, அல்லது மேலிடத்தின் அழுத்தத்தால் போலீசார் அஜித்குமாரை கடுமையாகத் தாக்கி கொன்றனரா?" எனப் பல கேள்விகள் எழுந்தன.

இந்த சந்தேகங்களைக் கருத்தில் கொண்டு, மதுரை உயர் நீதிமன்றம், அஜித்குமார் மரண வழக்கை மட்டுமின்றி, நகை திருட்டு வழக்கை விசாரிக்குமாறும் சிபிஐ-க்கு உத்தரவிட்டது.

சிபிஐ வழக்குப்பதிவு

இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுபடி சிபிஐ அதிகாரிகளிடம் போலீசார் ஆவணங்களை ஒப்படைத்ததை அடுத்து, திருட்டு புகாரிலும் நேற்று ( ஆகஸ்ட் 28) வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.