Vinesh Phogat Disqualification Case in Paris Olympics 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளன. கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 11ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 5 வெண்கலகம், 1 வெள்ளி என மொத்தம் 6 பதங்கங்களை கைப்பற்றி 71வது இடத்தை பிடித்தது. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தை தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார். இதேபோல் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை வென்று இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. இதேபோல் 55 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்தப் போட்டியில், 21 வயதான இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தினார். இதேபோல் இந்தியாவுக்கு இன்னொரு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைத்திருக்க வேண்டியது.
50 கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்க இருந்த நிலையில், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திடீரென தகுதி நீக்கம் செய்தது. இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு கலைந்து போனது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வினேஷ் போகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வருமா? என ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தது. இந்நிலையில், வினேஷ் போகத்தின் மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, ''வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இந்திய ஒலிம்பிக் சங்கம் எப்போதும் வினேஷ் போகத் பக்கம் நிற்கும் என்றார். வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வினேஷ் போகத்துக்கு நீதி வழங்க வேண்டும் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.