விளையாட்டு

டிரெஸ்ஸிங் ரூமில் சேவாக்- சேப்பல் இடையே நிகழ்ந்த பிரச்னை.. கூல் செய்த டிராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக், இந்திய டிரஸ்ஸிங் ரூமில் பயிற்சியாளர் க்ரேக் சேப்பலுடன் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

டிரெஸ்ஸிங் ரூமில் சேவாக்- சேப்பல் இடையே நிகழ்ந்த பிரச்னை.. கூல் செய்த டிராவிட்!
Sehwag Recalls Heated Argument with Greg Chappell Cooled Down by Rahul Dravid
சர்வதேச கிரிக்கெட்டில் டேஞ்சர் பேட்ஸ்மேன்கள் என ஒரு பட்டியல் எடுத்தல் நிச்சயம் இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கின் பெயர் இடம்பெறும். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், வீரேந்தர் சேவாக்கின் புகழ் இன்னும் மங்கவில்லை.

இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பலுடன் நிகழ்ந்த கசம்பான சம்பவத்தினை நினைவு கூர்ந்துள்ளார் சேவாக். இப்ப இருக்கிற 2கே கிட்ஸ்களுக்கு க்ரேக் சேப்பால் யாரென்று தெரியாமல் இருக்கலாம், ஆனால் 90ஸ் கிட்ஸ் வரைக்கும் க்ரேக் சேப்பலை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் செயல்பட்ட காலம், அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். அதற்கு காரணம் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கும், சேப்பலுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை வந்தது தான். இதில் சேவாக்கும் தப்பவில்லை.

சேவாக்- சேப்பல் இடையேயான வார்த்தை போர்:

தனியார் யூடியூப் சேனலில் சேவாக் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு- “கிரெக் சாப்பலின் வார்த்தைகள் என்னைப் புண்படுத்தின. நான் அந்த சமயம் பெரிதாக ரன்கள் எடுக்காத காலக்கட்டம். சேப்பல் என்னிடம், 'நீ உன் காலை நகர்த்தவில்லை என்றால், சர்வதேச அளவில் ரன்கள் எடுக்க மாட்டாய்' என்று கூறினார்.

அதற்கு நான், 'கிரெக், நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட சராசரியுடன் 6000 ரன்கள் அடித்துள்ளேன்' என்று பதிலளித்தேன். அதற்கு அவர், 'அது ஒரு பொருட்டல்ல, நீ உன் காலை நகர்த்தவில்லை என்றால், ரன்கள் எடுக்க மாட்டாய்' என்று மீண்டும் என்னிடம் கூறினார். எங்களுக்குள் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் தான் எங்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்.

அடுத்த நாள், நான் பேட்டிங் செய்யப் போகும்போது, அவர், 'ரன்கள் எடுப்பதை உறுதி செய், இல்லையென்றால் நான் உன்னை அணியிலிருந்து நீக்கிவிடுவேன்' என்றார். நான், 'உங்களுக்கு என்ன வேண்டுமே அதை செய்யுங்கள்' என்றேன். ஒரு பேட்டர் பேட்டிங் செய்யப் போகும்போது, பயிற்சியாளரிடம் இருந்து இப்படிப்பட்ட விஷயங்களைக் கேட்டால், எப்படி இருக்கும்” என்று சேவாக் கூறினார்.

“நான் களமிறங்கியதும் பந்துகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தேன், மதிய உணவுக்கு முன் 99 ரன்களை எட்டினேன். நான் டிரஸ்ஸிங் ரூமுக்குள் நுழையும்போது, டிராவிட் அங்கு நின்றுகொண்டிருந்தார். நான் அவரிடம், 'உங்கள் பயிற்சியாளரை என்னிடம் வர வேண்டாம் எனச் சொல்லுங்கள்' என்றேன்.

மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மீண்டும் களத்துக்குத் திரும்பி பேட்டிங் செய்ய ஆரம்பித்தேன். 184 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானேன். பிறகு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த சேப்பலை பார்த்து, 'நான் காலை நகர்த்தினாலும், நகர்த்தாவிட்டாலும், எனக்கு எப்படி ரன் அடிக்க வேண்டும் என்று தெரியும் என்று சொன்னேன்" என தன் நினைவலைகளை பகிர்ந்துள்ளார் சேவாக்.

சேவாக் தனது பேட்டியில், இது எந்த அணிக்கு எதிரான போட்டி என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை. இருப்பினும் சேவாக் குறிப்பிடும் நிகழ்வை வைத்து பார்த்தால், இது 2006 இல் இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் இடையே க்ரோஸ் ஐலெட்டில் நடந்த டெஸ்ட் போட்டியாக இருக்கலாம் என்று தெரிய வருகிறது. அந்த போட்டியில் சேவாக் 180 ரன்களுடன், டிராவிட் (140) மற்றும் முகமது கைஃப் (148*) ஆகியோரின் சதங்களும் சேர்ந்து இந்தியா 588/8 என்ற வலுவான ஸ்கோரை எடுத்தது. எனினும், அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சேவாக்:

2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை என இரண்டு ஐசிசி பட்டங்களை வென்றுள்ள சேவாக், டெஸ்ட் போட்டிகளில் மிகவும் அச்சுறுத்தலான பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். இந்தியாவுக்காக 104 டெஸ்ட் போட்டிகளிலில் விளையாடியுள்ள சேவாக், 8568 ரன்கள் (சராசரி-49.34) எடுத்துள்ளார். இரண்டு முச்சதங்கள் உட்பட மொத்தம் 23 சதங்களை அவர் அடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் கூட, சேவாக் 251 போட்டிகளில் விளையாடி 8273 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 15 சதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டியில் இவரது சிறந்த ரன் 2011 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடித்த 219 ஆகும். மேலும், சேவாக் இந்திய அணியின் முதல் டி20 போட்டியில் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.