PV Sindhu Meets Ramcharan Family Photos Viral : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் 2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. விளையாட்டுத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதில் இந்தியா சார்பாக 117 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், போட்டியின் 2வது நாளான நேற்று, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக பி.வி.சிந்துவும், மாலத்தீவு சார்பாக ஃபாத்திமத் நபாஹாவும் நேருக்கு நேர் மோதினர். இப்போட்டி மொத்தம் 29 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பி.வி.சிந்து, ஃபாத்திமத்தை 21 - 9, 21 - 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதற்கு முன்பாக நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றுப் போட்டியில் இந்தியா சார்பாக மனுபார்க்கர் களமிறங்கினார். மொத்தம் 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில், 221.7 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் இந்தியாவின் வெற்றியை தொடங்கிவைத்தார் என்றே கூறலாம்.
இந்நிலையில் பி.வி.சிந்து தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்தபோது நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா அவருக்கு உற்சாகம் அளித்தனர். இதையடுத்து போட்டி முடிந்த பின்பு, ராம் சரண் மற்றும் உபாசனா, இந்தியாவின் நம்பிக்கை நாயகியான பி.வி.சிந்துவை நேரில் சந்தித்து வாழ்த்தி புகைப்படம் எடுத்துகொண்டனர். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த உபாசனா, “நீங்கள் ஒரு உண்மையான ராக் ஸ்டார்” என பதிவிட்டு பி.வி.சிந்துவை டேக் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ராம் சரணின் தந்தையான சிரஞ்சீவி மற்றும் தாயாரான சுரேகா ஆகியோருடனும் பி.வி.சிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. பாரிஸ் ஒலிம்பிக் 2024-ன் தொடக்க விழாவிலும் ராம் சரண் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.