Irani Cup 2024 : மும்பை மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையேயான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்தது.
அபாரமாக ஆடிய சர்ஃப்ராஸ் கான் இரட்டை சதம் [222 ரன்கள்] விளாசி அசத்தினார். அதேபோல் மும்பை அணி கேப்டன் அஜிங்கே ரஹானே 3 ரன்களில் சதத்தை தவறவிட்ட நிலையில், 97 ரன்களில் வெளியேறினார். தனுஷ் கோட்டியன் 64 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களும் எடுத்தனர்.
ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் அதிகப்பட்சமாக முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யஷ் தயாள் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 416 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய அபிமன்யூ ஈஸ்வரன் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேபோல், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 392 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி, அடுத்து 24 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
மும்பை அணி தரப்பில் தனுஷ் கோட்டியான் மற்றும் ஷம்ஸ் முலானி இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மோஹித் அவஸ்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 121 ரன்கள் முன்னிலையுடன் மும்பை அணி களமிறங்கியது.
நேற்று நான்காம் நாள் ஆட்டம் வரை மும்பை தனது இரண்டாவது இன்னிங்ஸில், 8 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதிகப்பட்சமாக தனுஷ் கோட்டியன் 114 ரன்களும், மோஹித் அவஸ்தி 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 76 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் மும்பை அணியை கட்டுப்படுத்த 9 வீரர்களை பந்துவீச வைத்தது. விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே பந்துவீசவில்லை. இஷான் கிஷன் கூட ஒரு ஓவர் பந்துவீசி 6 ரன்களை விட்டுக்கொடுத்து இருந்தார். அதே சமயம் சர்ன்ஷ் ஜெயின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 450 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில், ஆட்டம் டிரா ஆனதாக இரு அணிகளின் கேப்டன்களும் ஒத்துக்கொண்டனர். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில், மும்பை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பை கைப்பற்றியது. இதற்கு முன்னதாக, 1997-98 ஆண்டில் மும்பை அணி கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக மும்பை அணி வீரர் சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார்.