Washington Sundar About Suryakumar Yadav Leadership : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, சூர்யகுமார் தலைமையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வென்றிருந்த நிலையில், 3ஆவது டி20 போட்டி ஜூலை 30ஆம் தேதி பல்லேகலேவில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களம்புகுந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பு 137 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 37 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். ரியான் பராக் 18 பந்துகளில் 26 ரன்களும், வாஷிங்டன் சுந்த 18 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களமிறங்கிய இலங்கை அணியினர் மிகச் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 26 ரன்களும், குசல் மெண்டிஸ் 43 ரன்களும் எடுக்க இலங்கை 15. ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி வெற்றிபெற கடைசி 28 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குசல் பெரேரா 26 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதனால், இலங்கை அணியின் வெற்றி கைக்கு அருகில் இருந்தது.
ஆனால், இந்திய அணியினர் சிறப்பான யுத்தியை கையாண்டனர். 17ஆவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசி 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 18ஆவது ஓவரை கலீல் அஹமது வீசி 12 ரன்களை கொடுத்தார். இதில் உதிரி வகையில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கடைசி 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால், அப்போது இந்திய அணி வித்தியாசமான முடிவை எடுத்தது.
19ஆவது ஓவரை வீச ரிங்கு சிங் அழைக்கப்பட்டார். அவர் அந்த ஓவரில் 46 ரன்களில் குசல் பெராரவையும், ரமேஷ் மெண்டிஸையும் (3) வெளியேற்றியதோடு 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 6 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை சூர்யகுமார் யாதவ் வீசினார். அவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதனால், ஆட்டம் சமனில் முடிவடைந்ததை அடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வாஷிங்டன் சுந்தரின் பந்தில் வீழ்ந்தது. முதல் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதனால், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆட்டநாயகன் விருது வாஷிங்டன் சுந்தருக்கும், தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கேப்டன் சூர்யகுமார் குறித்து கூறியுள்ள வாஷிங்டன் சுந்தர், ”சூர்யகுமார் யாதவின் தலைமைப் பண்பிற்கான அறிவு வியக்கத்தக்கது. அந்த சூழலில் [கடைசி 4 ஓவர்கள்] அதிக சுழற்பந்து வீச்சாளர்களை பந்துவீச வைத்தால், ஆட்டத்தில் வெற்றிபெற வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் உணர்ந்ததாக நான் நினைக்கிறேன். மைதானத்தின் தன்மை மற்றும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் ஒன்றிரண்டு விருப்பங்களை தேர்வு செய்தார். அது எங்களுக்கு அதிசயங்களைச் செய்தது.
கடைசி 2 ஓவர்கள் இருந்தபோது குசல் பெரேரா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ரிங்கு சிங் அவரை வெளியேற்றினார். பிறகு கடைசி ஓவரை சூர்யகுமார் பந்துவீச வந்தபோதே, ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அவர் பேட்டிங் செய்யும்போது பரந்த இதயத்துடன் விளையாடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தலைமைப் பண்பிலும் கூட அவர் சிறந்தவர்” என்றார்.
மேலும், அவர் கூறுகையில், “நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், சூப்பர் ஓவரில் நான் பந்துவீசவேண்டி வரும் என்று எனக்கு எந்த சிந்தனையும் இல்லை. சூர்யகுமார் அழைத்து என்னை பந்துவீசச் சொன்னார். உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சூப்பர் ஓவர் போன்ற கடினமான சூழலில், அணியின் கேப்டன் அழைப்பது என்பது சிறப்பான விஷயம். இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று நினைத்துக் கொண்டு, நாட்டிற்காக போட்டியை வென்று கொடுத்துள்ளேன்” என்றார்.