விளையாட்டு

பார்முக்கு திரும்பிய பிரக்ஞானந்தா: சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்று அசத்தல்!

கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 (Grand Chess Tour Superbet Chess Classic 2025) போட்டி இன்று சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா டை-பிரேக் சுற்றில் அபாரமாக விளையாடி தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றார்.

பார்முக்கு திரும்பிய பிரக்ஞானந்தா: சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்று அசத்தல்!
Praggnanandhaa wins the Grand Chess Tour Superbet Chess Classic 2025 title
கடந்த சில ஆண்டுகளாகவே செஸ் போட்டிகளில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குகேஷ்,பிரக்ஞானந்தா,அர்ஜூன் போன்ற இளம் இந்திய வீரர்கள் உலகின் முன்னணி செஸ் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர்.

Grand Chess Tour Superbet Chess Classic 2025:

கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 தொடர் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி புதன்கிழமையன்று ருமேனியாவின் புக்கரெஸ்ட் நகரில் தொடங்கியது. கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் தொடரில் இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் கருணா, நோடிர்பெக், போக்டன்-டேனியல் டீக் உட்பட முன்னணி வீரர்களும் பங்கேற்றிருந்த நிலையில் ஆர்.பிரக்ஞானந்த டைட்டிலை வென்று அசத்தியுள்ளார்.

விறுவிறுப்பான கிளாசிக்கல் சுற்று ஆட்டங்களின் நிறைவில் 3 வீரர்கள் ஒரே புள்ளியுடன் முன்னிலையில் இருந்தனர். இந்தியாவின் பிரக்ஞானந்தா(R Praggnanandhaa), பிரான்சின் மேக்ஸிம் வாச்சியர்-லாக்ரேவ் (Maxime Vachier-Lagrave) & அலிரேசா ஃபிரோஜ்ஜா (Alireza Firouzja) ஆகியோர் 5.5/9 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க மின்னல் வேக செஸ் (Blitz) போட்டி நடத்தப்பட்டது.
Image

பிரக்ஞானந்தா தனது கடைசி கிளாசிக்கல் சுற்று ஆட்டத்தில் லெவோன் அரோனியனுக்கு எதிராக விளையாடிய போது ஆட்டத்தினை டிரா செய்தார். பின்னர் நடைபெற்ற மின்னல் வேக செஸ் போட்டிகளில் அபாரமாக விளையாடினார். இறுதி ஆட்டத்தில் வாச்சியர்-லாக்ரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

ப்ளே-ஆப் சுற்று முடிவுகள்:

--> Alireza Firouzja - R Praggnanandhaa : 0.5-0.5 (டிரா)
--> Maxime Vachier-Lagrave - Alireza Firouzja : 0.5-0.5 (டிரா)
---> R Praggnanandhaa - Maxime Vachier-Lagrave : 1-0 (பிரக்ஞானந்தா வெற்றி)

இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தாவுக்கு $77,667 பரிசுத்தொகையும், 10 கிராண்ட் செஸ் டூர் புள்ளிகளும் கிடைத்தன. பிளேஆஃபில் சிறப்பாக விளையாடியதற்காக அவருக்கு கூடுதலாக $10,000 போனஸ் வழங்கப்பட்டது. கிளாசிக்கல் மற்றும் பிளேஆஃப் ஆட்டங்களின் முடிவுகள் அடிப்படையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் முறையே வாச்சியர்-லாக்ரேவ் மற்றும் ஃபிரோஜ்ஜா ஆகியோர் பிடித்தனர்.

ஆர்.பிரக்ஞானந்தா இந்த வெற்றி குறித்து கூறுகையில், "ஒரு GCT போட்டியை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டும் நான் இறுதி போட்டி வரை வந்தேன். கடந்த ஆண்டும் இதைப்போல் டை-பிரேக் சுற்று எங்களுக்கு இருந்தது. கடந்த முறை நான் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. இந்த ஆண்டு டை-பிரேக்கிற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ஓய்வெடுத்தது நிச்சயமாக உதவியது என்று சொல்வேன். டை-பிரேக் ஆட்டங்கள் பைத்தியக்காரத்தனமாக இருந்தன. முடிவுகள் எவ்வாறு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்" என்றார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு நடைப்பெற்ற 87-வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸை வென்ற நிலையில், இந்த ஆண்டில் பிரக்ஞானந்தா வெல்லும் இரண்டாவது வெற்றி இதுவாகும். 2025 கிராண்ட் செஸ் டூரின் இரண்டு தொடர்கள் முடிவடைந்த நிலையில், மேக்ஸிம் வாச்சியர்-லாக்ரேவ் 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆர்.பிரக்ஞானந்தா 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.