Suryakumar Yadav About Red Ball Cricket : குறைந்த வடிவிலான போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் சூர்யகுமார் யாதவ். இவர், டி வில்லியர்ஸ்-க்கு பிறகு 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் அளவிற்கு மைதானத்தின் அனைத்து பகுதிக்கும் சிக்ஸர்களை விளாசும் திறமை படைத்தவர்.
இந்திய அணிக்காக 71 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 2,432 ரன்களை எடுத்துள்ளார். 4 சதங்கள் எடுத்து அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும், 20 அரைசதங்களை விளாசி உள்ளார். ஒட்டுமொத்தமான டி20 போட்டிகளில், 6 சதங்களையும், 52 அரைசதங்களையும் அடித்துள்ளார்.
சமீபத்தில் கூட இந்திய கேப்டனாக செயல்பட்ட சூர்யகுமார், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தார்.
ஆனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தலைகீழான ரெக்கார்டையே சூர்யகுமார் வைத்துள்ளார். 37 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி, 773 ரன்களையும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 ரன்களையும் எடுத்துள்ளார். நீண்ட வடிவிலான கிரிக்கெட் ஃபார்மெட்டுகளில் பெரியளவில் இன்னும் சாதிக்கவில்லை.
இதற்கிடையில், உள்ளூர் போட்டிகளில் ஒன்றான திலீப் டிராபி தொடரில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள சூர்யகுமார் யாதவ், “எண்ணற்ற வீரர்கள் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக, உண்மையிலேயே கடினமாக உழைத்து வருகிறார்கள். அதேபோல நானும் எனது மீண்டும் பிடிக்க விரும்புகிறேன்.
இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் தான், நான் அறிமுகமானேன். அதன்பிறகு காயம் காரணமாக பங்கேற்க முடியவில்லை. அதற்கிடையில், நிறைய பேர் வாய்ப்பு கிடைத்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த வாய்ப்புக்கு அவர்கள் இப்போது தகுதியானவர்களாகவும் இருக்கிறார்கள்.
"நான் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறேன். புச்சி பாபு தொடரை விளையாடுவது, துலீப் டிராபியை விளையாடுவது மட்டும் தான் எனது சக்திக்கு உட்பட்டு இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதைப் பிறகு பார்க்கலாம். வரிசையாக பத்து டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அவற்றை எதிர்நோக்கி காத்திருக்கின்றேன். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக, நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், அறிமுகப் போட்டியிலேயே 73 ரன்கள் எடுத்ததோடு, 9 போட்டிகளில் 954 ரன்கள் குவித்தார்.