EVKS Elangovan About TVK Vijay : தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் உள்ள பெரியார் அண்ணா நினைவகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்காரா மற்றும் கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வும் பெரியாரின் பேரனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “கோவையில் நடைபெற்ற கூடத்தின் போது ஜி.எஸ்.டி.யை ஒழுங்குப்படுத்த வேண்டும் எனக்கூறிய அன்னபூர்ணா உணவக உரிமையாளரை ஆட்களை வைத்து மிரட்டி காலையில் மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியீட்டு இருப்பது கேவலமான செயல்.
இதன் மூலம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மனிதர்களை மதிக்கும் மனித தன்மை இல்லை என்பதை தான் காட்டுகிறது. பூரண மதுவிலக்கு என்பதில் நம்பிக்கை உள்ளது. கள்ளுக்கடையால் மக்கள் உடல் பாதிப்பு இல்லாத நிலையில், விவசாயிகளுக்கு வருமானமாக இருக்கும் என்பதால் கள்ளுக்கடை திறந்தால் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள்”
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் கூறியுள்ள கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த இளங்கோவன், “சிலர் கட்சியின் கொள்கைகள் பற்றியும், வெளியிட்ட கொடி பற்றியும் விளக்கம்கூட சொல்லவில்லை. அவர்கள், கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே ஆட்சியை பிடிப்போம் என சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் மத்தியில் நீண்ட காலம் அரசியல் செய்து, ஒரு குறிப்பிட்ட வாங்கு வங்கியை வைத்துள்ள திருமாவளவன் சொல்வதில் தவறில்லை. ஆட்சி அதிகாரத்தை யார் பிடிப்பது என்பதை விட மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து, நாடாளுமன்றத்தில் மதவெறியாளர்களை தோல்வியடைய செய்ததை போல, 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியை கொடுக்க வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஹெச்.ராஜா ஓய்வு பெற வேண்டியவர் என்பதால், அவரை விடுங்கள். அண்ணாமலை போனபிறகு அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றிபெற முடியாத நபர் என்பதால், அவர் காலாவதியான ராஜா” என கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், '’ஆட்சியிலும் பங்கு ,அதிகாரத்திலும் பங்கு. கடைசி மக்களுக்கு ஜனநாயகம். எளிய மக்களுக்கு அதிகாரம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். இதனை அடுத்து தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.