அரசியல்

“சிலர் எழுதிக்கொடுப்பதை தவறாக பேசுகிறார்கள்” – விஜய்க்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி

தமிழகத்தில் அலையாத்தி காடுகள் குறைவாக இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

 “சிலர் எழுதிக்கொடுப்பதை தவறாக பேசுகிறார்கள்” – விஜய்க்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி
அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் தவெக தலைவர் விஜய்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கால்டன் சமுத்திராவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடைபெறும் தமிழ்நாடு அலையாத்தி காடுகள் மாநாடு 2025-ஐ தமிழக வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து, அலையாத்தி அறிக்கையை (MANGROVE REPORT) வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், “அலையாத்தி காடுகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. இது பாதுகாக்க வேண்டியது அவசியம்‌.

சிலர் தெரியாமல் பேசுகின்றனர்

தமிழகத்தில் அலையாத்தி காடுகள் குறைவாக உள்ளது என சிலர் புரியாமல் பேசுகிறார்கள். சங்க இலக்கியங்களில் நமது அலையாத்தி காடுகள் குறித்து சொல்லி உள்ளது பெருமை வாய்ந்தது. திமுக அரசு வந்த பிறகு காடுகள் மேம்பட்டுள்ளன. திமுக அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அலையாத்தி காடுகளை பாதுகாக்கின்றன. சிலர் அது தெரியாமல், அலையாத்தி காடுகள் குறித்து பேசுகிறார்கள். இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு.

2-வது பணக்கார மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் ஊழல் எப்போதும் இல்லை. தேர்வு மூலம் தான் வனத்துறைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்போது எல்லாரும் கார் வைத்துள்ளனர். மலேசியாவில் ரூ.36 பெட்ரோல். ஆனால் இங்கு ரூ.102க்கு விற்பனையாகிறது. இங்கு தான் அதிகமான கார் பயன்பாட்டில் உள்ளது.


மீண்டும் திமுக ஆட்சி தான்

பிச்சாவரம் நேரடியாக சென்று பாருங்கள். வெளிநாடுபோல் தான் இருக்கும். தமிழகத்தை பற்றாக்குறை மாநிலம் என சொல்லலாம். ஆனால் வளர்ந்த மேம்பட்ட மாநிலம். பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2-வது முறையாக திமுக ஆட்சிக்கு வருவோம். நீங்கள் ஓட்டு போட்டாலும், சரி போடாவிட்டாலும் சரி 55 ஆண்டுகளாக அரசியலில் உள்ளோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 4,500 ஹெக்டரில் இருந்து 9,000 ஹெக்டேராக அலையாத்தி காடுகளாக நாங்கள் மேம்படுத்தி உள்ளோம். சிலர் எழுதிக்கொடுத்ததை பேசுகிறார்கள். தப்பா பேசுகிறார்கள். தமிழகத்தில் அலையாத்தி காடுகள் குறைவாக இல்லை. சிலர் எழுதிக் கொடுப்பதை, தப்பாக எழுதிக்கொடுக்கிறார்கள் என்றார். மேலும், அலையாத்தி காடுகளை பாதுகாப்போம். நாம்‌ வெற்றி பெறுவோம். திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்

அதேபோன்று வனத்துறை வசமுள்ள பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தி அங்கு வசிக்கும் மக்களும் வாக்களிக்க செல்ல ஏதுவாக சாலை வசதிகளும் விரைவில் மேம்படுத்தப்படும் என்றார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துறையின் கூடுதல் செயலர் சுப்ரியா சாஹு, “இரண்டு நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் தேசிய அளவில் ஆறு மாநிலங்களில் இருந்து வந்த குழுவினர் நேற்றைய தினம் கடலூர் மாவட்டம் பிச்சாவரம் பகுதியை சென்று ஆய்வு செய்தோம். அங்குள்ள அலையாத்தி காடுகளை ஆய்வு செய்த பின், நமது தமிழகத்தில் 2,400 ஹெக்டர் பரப்பளவில் புதியதாக மரங்கள் நடும் பணி முடிவுற்றுள்ளது. 1,200 ஹெக்டர் பரப்பளவில் உள்ள அலையாத்தி காடுகளை பராமரித்து வருகிறோம் என்றார். நிகழ்ச்சியில் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.