அரசியல்

பில்லியோ? புஸ்ஸியோ? TVK கூட்டணி குறித்து ஹெச்.ராஜா கமெண்ட்

”த.வெ.க தலைவர் விஜய் கூட்டணி வைப்பதும், தனித்து போட்டியிடுவதும் அவரது விருப்பம். தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது விஜய்-க்கு நல்லது” என மதுரையில் ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பில்லியோ? புஸ்ஸியோ? TVK கூட்டணி குறித்து ஹெச்.ராஜா கமெண்ட்
H.Raja talk about alliance with tamilaga vettri kazhagam
மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலை அருகே ஜீன் 22 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மதுரை சின்னசொக்கிக்குளத்தில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் ஊழல்:

இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை அறிக்கை வந்தவுடன் திமுக அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடைப்பெற்றுள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக உள்ளனர். எங்கே ஒடி, ஒளிந்தாலும் உப்பு திண்ணவன் தண்ணீ குடிக்க வேண்டும்.

ஸ்டாலின், உதயநிதிஸ்டாலின், மகேஷ் பொய்யா மொழி குடும்பமே டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்டுள்ளது. ஊழல் விவகாரம் குறித்த தகவல்கள் திமுக அரசுக்கு 4 மாதங்களுக்கு முன்பே தெரிய வந்ததால் ஊழலை மடைமாற்றும் விதமாக திமுக அரசு மும்மொழி கொள்கை குறித்து பேசினார்கள். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின்னர் இந்த ஊழலில் இன்னும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என தெரியவரும்” என்றார்.

மேலும் பேசுகையில், ”திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையை சிக்கந்தர் மலை என கூறி தீய சக்திகள் அபகரிக்க நினைக்கிறது. 2026-ல் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என திமுக கனவு காண அவர்களுக்கு உரிமையுள்ளது. யார் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு என்ன வந்தது? கூடா நட்பு கேடாய் முடியும் என சொன்ன திமுக தற்போது காங்கிரஸ் கூட இன்றைக்கு கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் கூட கூட்டணி வைத்துள்ள திமுகவுக்கு வெட்கமாகமில்லை? திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு சூடு, சொரணையில்லை.. அதிமுக - பாஜக கூட்டணி திமுகவுக்கு தோல்வி பயத்தை கொடுத்துள்ளது” என்றார்.

தவெக கூட்டணி?

தவெக பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா என கேள்வி எழுப்பியபோது, “TVK குறித்து நான் கருத்து கூற முடியாது.தவெக-வில் யாரோ இருக்கிறாரே..பில்லியோ? புஷியோ? யாரோ இருக்கிறார்கள் அல்லவா..அவர்கள் பார்த்துக்கொள்வார். தவெக தலைவர் விஜய் தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது நல்லது. தவெக விஜய் கூட்டணி வைப்பதும், தனித்து போட்டியிடுவதும் அவரது விருப்பம்” என கூறினார்.

மதுரையில் கனிமவள கொள்ளை மற்றும் சிங்கம்புணரி பகுதியில் நடைபெற்ற குவாரி மரணம் குறித்த கேள்விக்கு, "அந்த கனிமவள கொள்ளை குறித்தும் மலையை நேரில் ஆய்வு செய்த பிறகு பதில் கூறுகிறேன். நான் ஏற்கனவே சொல்லுவது போல வரும் காலங்களில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மலை இருந்தது என்கின்ற ஒரு நிலை வந்துவிடும் போல் இருக்கிறது" என ஹெச்.ராஜா பதிலளித்தார்.