லைஃப்ஸ்டைல்

கம்மி பட்ஜெட்டில் இந்தியாவிலிருந்து பறக்க சிறந்த 10 இடங்கள்.. ஸ்கை ஸ்கேனர் பரிந்துரை

பயணம் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால், செலவு ஒரு பெரிய தடையாக இருக்கலாம். 2025 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து குறைந்த செலவில் பயணிக்க சில அருமையான இடங்களின் பட்டியலை ஸ்கை ஸ்கேனர் வழங்கியுள்ளது.

கம்மி பட்ஜெட்டில் இந்தியாவிலிருந்து பறக்க சிறந்த 10 இடங்கள்.. ஸ்கை ஸ்கேனர் பரிந்துரை
Top 10 Destinations for Budget Travelers in 2025- Skyscanner
வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய நினைப்பவர்கள் முதலில் இணையத்தில் தேடுவது, விமான டிக்கெட் விலை தான். ஸ்கை ஸ்கேனர் போன்ற இணையதளங்கள், கம்மியான பட்ஜெட்டில் விமான சேவை மேற்கொள்ள பெரிதும் உதவுகிறது. விமானங்களின் டிக்கெட் விலையானது 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை கணிசமாகக் குறைந்துள்ளன. அந்த வகையில் ஸ்கை ஸ்கேனர் ’விமான டிக்கெட் விலை வீழ்ச்சி’-யின் தரவுகளை பகுப்பாய்வு செய்து, 2025-ல் குறைந்த பட்ஜெட்டில் பயணிக்க சிறந்த 10 இடங்களின் பட்டியலை வழங்கியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு-

அல்மாட்டி, கஜகஸ்தான்: இயற்கை எழில் கொஞ்சும் இந்த மத்திய ஆசிய நகரத்திற்கு இந்தியாவிலிருந்து செல்ல விமானக் கட்டணமானது 44% சரிவைக் கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நேரடி விமான சேவைகள் அதிகரித்திருப்பது தான்.

ஜகார்த்தா, இந்தோனேசியா: பழமைவாய்ந்த கலாச்சாரம் மற்றும் அதிகப்படியான ஷாப்பிங் வாய்ப்புகளைக் கொண்ட ஜகார்த்தாவுக்கு இந்தியாவிலிருந்து செல்ல விமானக் கட்டணம் 27% குறைந்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் ஒரு சர்வதேச பயணத்தை மேற்கொள்ள இது நல்ல சான்ஸ்.
Image

சிங்கப்பூர்: இந்தியர்கள் பெரும்பாலும் பயணம் செய்ய விரும்பும் நாடு. இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்ல விமான சேவை கட்டணமானது 19% சரிந்துள்ளது. குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவருக்கும் ஏற்ற இடமாக சிங்கப்பூர் திகழ்வதால் இந்த சம்மர் விடுமுறையில் சிங்கப்பூர் சென்று வர செம வாய்ப்பு அமைந்துள்ளது.

கோலாலம்பூர், மலேசியா: ஷாப்பிங் மற்றும் உணவு பிரியர்களுக்கு ஏற்ற இடமாக கருதப்படும் கோலாலம்பூருக்கு இந்தியாவிலிருந்து பறக்க விமானக் கட்டணமானது 19% குறைந்துள்ளது.

புனோம் பென், கம்போடியா: வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கோர் வாட் போன்ற இடங்களுக்கு அருகிலுள்ள புனோம் பென்னுக்கு இந்தியாவிலிருந்து செல்ல விமானக் கட்டணம் 18% குறைந்துள்ளது. குறைந்த செலவில் கம்போடியாவின் அழகை காண இது ஒரு நல்வாய்ப்பு.
Image

ஒஸ்லோ, நார்வே: இந்த பட்டியலில் உள்ள ஒரே ஐரோப்பிய நகரம் ஒஸ்லோ தான். இந்தியாவிலிருந்து ஒஸ்லோ செல்ல விமானக் கட்டணமானது கிட்டத்தட்ட 17% குறைந்துள்ளது. ஐரோப்பியர்களின் கலச்சாரத்தை தெரிந்துக் கொள்ள, உணவு முறைகளை ருசி பார்க்க சரியான இடம் ஒஸ்லோ என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

லண்டன், இங்கிலாந்து: பிரபல சுற்றுலாத் தலமான லண்டனுக்கான விமானக் கட்டணம் 16% குறைந்துள்ளது. வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை ரசிக்க விரும்புபவர்களுக்கு லண்டன் ஒரு சிறந்த தேர்வு. சமீப ஆண்டுகளாக முதுகலை பட்டப்படிப்பிற்காக இந்தியர்கள் பலர் இங்கிலாந்து நோக்கி பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோஹா, கத்தார்: நவீன கட்டிடக்கலை மற்றும் பாலைவன சாகசங்களுக்கு பெயர் பெற்ற தோஹாவுக்கு விமானக் கட்டணம் 15% குறைந்துள்ளது.

சியோல், தென் கொரியா: தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை உள்ளடக்கிய சியோலுக்கு இந்தியாவிலிருந்து செல்ல விமானக் கட்டணம் 14% குறைந்துள்ளது. கொரிய உணவு மற்றும் பாப் கலாச்சாரத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த இடம்.

பாகு, அஜர்பைஜான்: காஸ்பியன் கடலின் கரையில் அமைந்துள்ள பாகுவுக்கு இந்தியாவிலிருந்து செல்ல விமானக் கட்டணம் 13% குறைந்துள்ளது. இது இந்த பட்டியலில் குறைந்தபட்ச விலை குறைவு ஆகும். தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்தை ஆராய விரும்புபவர்களுக்கு பாகு ஏற்றது. அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டதன் காரணமாக, பல இளைஞர்களின் தேடுதலில் அஜர்பைஜான் முக்கிய இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான டிக்கெட் விலை குறைந்தது ஏன்?

இந்த இடங்களுக்கான விமானக் கட்டணங்கள் குறைவதற்கு முக்கிய காரணம், புதிய நேரடி விமான சேவைகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான விமானச்சேவை தான். இதனால், விமான நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்து, பயணிகளுக்குக் குறைந்த விலையில் டிக்கெட்டுகள் தற்போது கிடைக்கின்றன என ஸ்கை ஸ்கேனர் விளக்கமளித்துள்ளது.

மேலும் விரிவான தகவலுக்கு காண்க: 2025 Best Value Destinations-sky scanner report