சினிமா

எமன் கொடுக்கும் ஆஃபர்.. என்ன செய்தார் நாயகன்? எமன் கட்டளை திரைப்பட விமர்சனம்

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது எல்லாம் நார்மல். அதையே எமலோகத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொன்னால், அது புதுமை!

எமன் கொடுக்கும் ஆஃபர்.. என்ன செய்தார் நாயகன்? எமன் கட்டளை திரைப்பட விமர்சனம்
yaman kattalai tamil movie review
கடந்த வாரம் புதுமுகங்கள் முதன்மை பாத்திரமாக இடம்பெற்ற எமன் கட்டளை திரைப்படம் வெள்ளித்திரையில் வெளியாகியது. அன்பு மயில்சாமி, சந்திரிகா போன்ற புதுமுகங்களுடன் அர்ஜுனன், நெல்லை சிவா, டி.பி.கஜேந்திரன், சார்லி, வையாபுரி, டில்லி கணேஷ், ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், மதுமிதா, கராத்தே ராஜா, கொட்டாச்சி, லதா ராவ், நளினி போன்ற சீனியர் நடிகர்களும் எமன் கட்டளை திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

எமன் கட்டளை திரைப்படத்தை எஸ்.ராஜசேகர் இயக்க, இப்படத்திற்கு என்.சசிகுமார் இசையமைத்துள்ளார். செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் - எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரிப்பில் உருவான
எமன் கட்டளை திரைப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்த குமுதம் விமர்சனம் இதோ..

படத்தின் கரு என்ன?

நிச்சயிக்கப்பட்ட ஒரு கல்யாணத்தை ஒருவன் நிறுத்த, நிறுத்திய அவனே மனசாட்சி உறுத்தியதால், விஷம் குடித்து சாகிறான். செத்தவன் மேலோகம் போக, அங்கே அவன் எமனை சந்திக்கிறான். அப்போது அவன் செய்த தவறை சரிசெய்ய, எமன் ஒரு வாய்ப்பு தருகிறார்.

'நீயே பூலோகம் சென்று, அந்தப் பெண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் செய்து அதையும், 60 நாட்களுக்குள் செய்தால்தான் உனக்கு மன்னிப்பு. இல்லையென்றால் உன் தலை வெடித்துவிடும்' என்று எமன் கட்டளையிட, மீண்டும் பூலோகம் வந்தவன் என்ன செய்கிறான் என்பதுதான் 'எமன் கட்டளை' .

மாப்பிள்ளைப் பார்க்க எமலோகத்தில் இருந்து வந்தவனையே மணப்பெண் கல்யாணம் பண்ணிக்கொள்ள நினைப்பது நல்ல ட்விஸ்ட். அதை இயக்குநர் எஸ். ராஜசேகர் இன்னும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கலாம்.

ஹீரோ அன்பு மயில்சாமியும், ஹீரோயின் சந்திரிகாவும் முடிந்தவரை சிறப்பாக, சிரிப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன், ஆர்.சுந்தர்ராஜன், வையாபுரி, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா, பவர் ஸ்டார், அனு மோகன், மதன் பாபு, சங்கிலி முருகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது... சிலர் இல்லை என்பதும் வருத்தத்துக்குரியது. ஒளிப்பதிவு, இசை, 80-ஸ் காலத்தை நினைவுபடுத்தினாலும் இதமாக இருக்கிறது. காட்சிகளில்தான் நம்பகத்தன்மையும், நகைச்சுவையும் இருக்க வேண்டிய அளவிற்கு இல்லை என்பதால், படம் வெளிவர எப்படி முக்கி முனகியிருக்கிறதோ, அப்படித்தான் திரையிலும் நகர்கிறது.

குமுதம் ரேட்டிங்- சுமார் ! 'எமன் கட்டளை' -கவர்னருக்குத் தான் அனுப்பணும்!