அறிமுக நடிகர் ஜேம்ஸ் கார்த்திக் ,நடிகை சோனியா அகர்வால், இனியா ஆகியோரது நடிப்பில் துரை முருகன் இயக்கத்தில் வெளியாக உள்ள சீரன் திரைப்படத்தின் இசை வெியீட்டு விழா சென்னையில் இன்று (செப். 28) நடைபெற்றது. விழாவில் நடிகை சோனியா அகர்வால், இனியா, ஆடுகளம் நரேன், சென்ராயன், இயக்குனர் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது படத்தின் இசையமைப்பாளர் பேசத் தொடங்கினார். அப்போது படத்தின் படத்தின் பாடல் ஆசிரியர் கு.கார்த்திக் கீழே அமர்ந்திருந்ததை பார்த்த அவர், உடனடியாக கு.கார்த்திக்கை மேலே அழைத்து மேடையில் அமர வைத்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் கு.கார்த்திக், “சீரன் திரைப்படம் ஒரு சீர்திருத்தத்தை உருவாக்கக்கூடிய கதைக்களம் கொண்ட திரைப்படம் ஆகும். இந்த படத்தில் 3 பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது. அதே மாதிரி என்னை ஞாபகம் வைத்து மேடையில் அழைத்த இசையமைப்பாளருக்கு நன்றி. நான் ஒரே ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். சினிமாவில் ஒடுக்கப்பட்டவர்களாக பார்க்கப்படுபவர்கள் பாடலாசிரியர்களும், எழுத்தாளர்களும்தான். சீரன் இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் மேடை எரவில்லை என்பதை கவனிக்காமல் உள்ளார்கள். இதை நான் எனக்காக பேசவில்லை. எனக்கும் இது நடந்திருக்கிறது, சக பாடலாசிரியர்களுக்கும் இது நடந்திருக்கிறது. அதற்காக தான் இதனை பதிவு செய்ய விரும்புகிறேன்.
எந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் படத்தின் நாயகர்கள், இசையமைப்பாளர்கள் மேடை ஏறி இருக்கிறார்களா? பாடலாசிரியர்கள் மேடையில் ஏறி இருக்கிறார்களா? என்பதை பார்க்க வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் போன்ற நட்சத்திரங்களுக்கு பாடல் எழுதி இருந்தும் இப்படி ஒரு நிலை இருக்கிறது என்பதை பத்திரிகை, ஊடக நண்பர்கள் எழுத வேண்டும்” என வலியுறுத்தினார்.
இவரைத்தொடர்ந்து பேசிய நடிகை சோனியா அகர்வால், “அழுத்தமான ஒரு கதைகளத்தை கொண்ட திரைப்படம் சீரன். இந்த படம் நிச்சயம் அனைவரையும் மோட்டிவேட் செய்யும். இதில் நான் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்” என்றார்.
மேலும் படிக்க: ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸரல்லா மரணம்.... கொண்டாடிய இஸ்ரேல் ராணுவம்!
இதையடுத்து பேசிய இயக்குனர் ராஜேஷ், “பாடலாசிரியர் கு கார்த்திக் தெரிவித்த கருத்தை ஆதரவளிக்கிறேன். எனது பிரதர் திரைப்படத்தில் வரும் மக்காமிஷி பாடலின் பாடல் ஆசிரியர் பால் டப்பா, படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வரமாட்டேன் என்று கூறினார். பின்னர் கட்டாயமாக அழைத்ததன் பேரில் விழாவிற்கு வந்தவர், ஒரு சில நிமிடங்களிலேயே சென்று விட்டார். எனவே பாடலாசிரியர்கள் இசை வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.