சினிமா

நடிகர் விஷாலுக்கு ஆக.29-ல் கபாலி நடிகையுடன் கெட்டி மேளம்!

நடிகர் விஷால்,நடிகை சாய் தன்ஷிகாவே காதலித்து வருகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்ட நிலையில் இருவரும் அதனை இன்று உறுதி செய்துள்ளனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

நடிகர் விஷாலுக்கு ஆக.29-ல் கபாலி நடிகையுடன் கெட்டி மேளம்!
Vishal And Sai Dhanshika Duo All Set To Tie The Knot
விஷால் தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி நாயகனாக வலம் வருகிறார். விஷால் 2004 ஆம் ஆண்டு வெளியான "செல்லமே" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் என பல்வேறு ஆக்‌ஷன் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (Vishal Film Factory) மூலமும் பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் (South Indian Artistes' Association - Nadigar Sangam) பொதுச் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். நடிகர் சங்க கட்டிட நிதிக்காக அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். சங்க கட்டிடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்வேன் என வெளிப்படையாகவே அறிவித்தார்.

ஆகஸ்ட்டில் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட உள்ள நிலையில்,நடிகர் விஷால்,நடிகை சாய் தன்ஷிகாவே காதலித்து வருகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில், சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘யோகிடா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் இன்று பங்கேற்றார். அப்போது மேடையில், ”தாங்கள் காதலித்து வருவதாகவும், நானும் விஷாலும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகை சாய் தன்ஷிகா.

நடிகை சாய் தன்ஷிகா 2010 ஆம் ஆண்டு வெளியான "நிலா நீ வானம் காற்று" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் "பரட்டை என்கிற அழகுசுந்தரம்", "மாப்பிள்ளை", "யாரடி நீ மோகினி" போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். 2013 ஆம் ஆண்டு பாலா இயக்கிய "பரதேசி" திரைப்படத்தில் அங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் பரவலாக அறியப்பட்டார். இந்தத் திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

அதன்பிறகு, "விழித்திரு", "கபாலி", "உரு", "மேற்குத் தொடர்ச்சி மலை" போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் நடிகர் ரஜினியின் மகளாக நடித்திருந்தார். வணிக ரீதியான திரைப்படங்களில் மட்டுமல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும், சாய் தன்ஷிகா தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் தொடர்பான அறிவிப்பை விஷால்-சாய் தன்ஷிகா வெளிப்படையாக அறிவித்த நிலையில், திரையுலக பிரபலங்கள்,சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.