GOAT Box Office Collection : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படம் முதல் நாளில் 126 கோடி ரூபாய் வசூலித்தது. இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால், கோட் திரைப்படம் தொடர்ந்து வசூலில் மிரட்டி வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கோட் இரண்டாவது நாளில் 200 கோடியை கடந்துள்ளதாக சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளிலும் கோட் வசூல் சிறப்பாகவே அமைந்துள்ளது. மூன்றாவது நாளான நேற்று மட்டும் 80 முதல் 100 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் முதல் மூன்றே நாட்களில் 300 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமையான இன்றும் கோட் படத்தின் டிக்கெட் புக்கிங் ரொம்பவே பிஸியாக காணப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உட்பட மற்ற மாநிலங்களில் 90 சதவீதம் டிக்கெட்டுகள் புக்கிங் ஆகியுள்ளதாம்.
அதனால், முதல் வாரத்தின் கடைசி நாளான இன்றும் கோட் வசூல் சிறப்பான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் கோட் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 400 கோடியை கடந்துவிடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு வெளியான படங்களில் அரண்மனை 4, மகாராஜா, ராயன், தங்கலான் மட்டுமே 100 கோடி வசூலை கடந்தன. ஆனால், விஜய்யின் கோட் முதல் வாரமே 400 கோடி கலெக்ஷன் என்ற புதிய சாதனையை படைக்கவுள்ளது. அதேநேரம், அடுத்த வாரம் முதல் இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எதிர்பார்த்தளவில் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க - ப்ரோமோஷனுக்கு மட்டும் தல... கோட் தயாரிப்பாளரை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்
விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்க ரெடியாகிவிட்டார். அதனால், கோட்-ஐ தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார். அதன் காரணமாகவும், விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்ததாலும் கோட் படத்துக்கு பெரிய ஓபனிங் இருந்தது. அதேபோல், விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம் உள்ளிட்ட மல்டி ஸ்டார்ஸ் பலரும் கோட் படத்தில் நடித்திருந்தனர். இதுவும் இத்திரைப்படத்துக்கு பெரிய ஹைப் கொடுத்திருந்தது. இதன் மூலம் முதல் வாரம் கோட் படத்துக்கு தரமான ஓபனிங் கிடைத்தது.
ஆனால், வெங்கட் பிரபுவின் மங்காத்தா, மாநாடு படங்கள் போல, கோட்டுக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைக்கவில்லை. திரைக்கதை, மேக்கிங், யுவனின் பிஜிஎம் உட்பட ஏராளமான லாஜிக் ஓட்டைகள் இருப்பதாக ரசிகர்கள் நெகட்டிவாக விமர்சித்து வருகின்றனர். இதனால் இரண்டாவது வாரத்தில் இருந்து டிக்கெட் புக்கிங் குறைந்துவிடும் எனத் தெரிகிறது. அப்படி குறைந்துவிட்டால், கோட் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிப்பது கஷ்டம் என்றே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.