சினிமா

நாளை மறுநாள் தீர்ப்பு.. தள்ளிப்போகும் 'ஜனநாயகன்' ரிலீஸ்?

ஜன நாயகன் திரைப்படத்திற்கான தணிக்கைத் தீர்ப்பை ஜன. 9 அன்று வழங்குவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் தீர்ப்பு.. தள்ளிப்போகும் 'ஜனநாயகன்' ரிலீஸ்?
JanaNayagan Case
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தாமதம் குறித்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று (விசாரணைக்கு வந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த வழக்கில் தீர்ப்பு ஜனவரி 9 ஆம் தேதி வழங்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். இதனால், அன்று வெளியாகவிருந்த திரைப்படத்தின் முதல் காட்சி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தணிக்கை வாரியத்தை நோக்கி நீதிபதியின் கேள்வி

வழக்கின் விசாரணை தொடங்கியதும், நீதிபதி பி.டி. ஆஷா, “ஒரு திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்க பெரும்பான்மை உறுப்பினர்கள் முடிவு செய்த பின்னரும், ஏன் அதை மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்?” என்று தணிக்கை வாரியத்திடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த தணிக்கை வாரியத் தரப்பு, ஒரு திரைப்படத்திற்குச் சான்றிதழ் கொடுத்த பின்பும் வழக்குத் தொடுக்கலாம் என்றும், முக்கியமாக, இப்படத்தில் பாதுகாப்புப் படையின் இலச்சினை (Logo) அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டனர். வாரியத்திற்குத் திருப்தி இல்லாததாலேயே மறு ஆய்வுக்கு உட்படுத்துவதாகவும், மறுதணிக்கைக்கு 4 வாரங்கள் அவகாசம் தேவை என்றும் அவர்கள் கோரினர்.

தயாரிப்புத் தரப்பின் அதிருப்தி

தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர், தணிக்கைச் சான்றிதழுக்கு டிசம்பர் 16 ஆம் தேதியே விண்ணப்பித்திருந்தும் காலதாமதம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். பெரும்பான்மை உறுப்பினர்கள் 'யு/ஏ' சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்ட நிலையில், ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் உடன்பாடு தெரிவிக்கவில்லை என்பதற்காக மறு ஆய்வுக்குக் கோரிக்கை வைப்பது நியாயமற்றது என்றும் அவர் வாதிட்டார். ரூ.500 கோடி முதலீட்டில் தயாரான படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், திடீரென மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்த அவகாசம் கேட்பது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் நீதிமன்றத்தில் கேள்விகளை அடுக்கினார்.

ஜனவரி 9-ல் தீர்ப்பு; வெளியீட்டில் சிக்கல்

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்தத் தணிக்கை விவகாரம் குறித்து ஜனவரி 9 ஆம் தேதி காலையில் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தீர்ப்பு வருவதால், முதல் காட்சியான காலை 9 மணிக்குத் திரைப்படம் திரையிடப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்தே படத்தின் வெளியீடு அமையும் என்பதால், ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.