சினிமா

'ஜனநாயகன்' படத்துக்கு சிக்கல்.. தணிக்கை வாரியம் மேல்முறையீடு- சட்டரீதியாக எதிர்கொள்வோம்: தவெக

'ஜனநாயகன்' பட விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் த.வெ.க. வழக்கறிஞர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

'ஜனநாயகன்' படத்துக்கு சிக்கல்.. தணிக்கை வாரியம் மேல்முறையீடு- சட்டரீதியாக எதிர்கொள்வோம்: தவெக
JanaNayagan Movie
விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 9) அதிரடி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இனிப்புகள் வழங்கி ஆரவாரம் செய்து கொண்டாடினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த த.வெ.க. வழக்கறிஞர் சக்கரவர்த்தி, மேல்முறையீடு செய்யப்பட்டால் அதைச் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

தணிக்கை வாரியத்திற்கு அதிகார வரம்பு இல்லை

நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுப் பேசிய வழக்கறிஞர் சக்கரவர்த்தி, "ஜனநாயகன் படத்தைப் பார்த்த பின்னரும் சான்றிதழ் வழங்காமல் தணிக்கைக் குழுவினர் காலம் தாழ்த்தி வந்தனர். விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தைத் தடுக்கும் வகையில் சென்சார் போர்டு செயல்பட்டு வந்தது. தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டு குழுவினர் ஏற்கனவே படம் பார்த்துவிட்டுச் சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கக் கூடாது. அவர்களுக்கு அதிகார வரம்பு இல்லை. எனவே உடனடியாகச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

அரசியல் உள்நோக்கம்; சட்ட ரீதியான எதிர்கொள்ளல்

"இந்தத் தீர்ப்பு விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜய்யின் வளர்ச்சியைக் பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே படத்தைக் கொண்டு வர விடாமல் தடுக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்," என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தணிக்கை வாரியம் மேல்முறையீடு சென்றாலும், "அதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இது அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. தீர்ப்பு முழு விவரம் வெளிவந்த பிறகு ஆலோசிப்போம்," என்று வழக்கறிஞர் சக்கரவர்த்தி நம்பிக்கை தெரிவித்தார். படம் எப்போது வெளியாகும் என்பது குறித்துப் படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

தணிக்கை குழு

தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்த நிலையில், திங்கள்கிழமை அன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தணிக்கை வாரியம் கோரிக்கை வைத்தது.

ஆனால், எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதியே முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜன நாயகன் திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.