சினிமா

ருச்சி குஜ்ஜரின் 'மோடி' முத்து மாலை.. கேன்ஸ் திரைப்பட விழாவில் சுவாரஸ்யம்

2025 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா மே 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற மே 24, 2025 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உருவம் பொறித்த முத்து மாலையுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் தோன்றிய ருச்சி குஜ்ஜர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ருச்சி குஜ்ஜரின் 'மோடி' முத்து மாலை.. கேன்ஸ் திரைப்பட விழாவில் சுவாரஸ்யம்
Ruchi Gujjar PM Modi Pearl Necklace
உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கேன்ஸ் திரைப்பட விழா 2025, வழக்கம் போல் உலக நட்சத்திரங்களின் கண்கவர் வருகையால் களைகட்டியுள்ளது. இந்த ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் பொறிக்கப்பட்ட முத்து மாலையுடன் நடிகையும் மாடலுமான ருச்சி குஜ்ஜர் ரெட் கார்பெட்டில் தோன்றியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற ரிவியரா கடற்கரை நகரமான கேன்ஸ் பகுதியில் ஆண்டுத்தோறும் நடைப்பெறும் திரைப்பட விழாவானது, சினிமா நிகழ்வுகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதற்கு காரணம், உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த திரைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. திரையிடப்படும் படங்களிலிருந்து சிறந்த திரைப்படங்களை அங்கீகரித்து, அவற்றுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து ஒரே நிகழ்வில் உலகின் ஒட்டுமொத்த திரை நட்சத்திரங்களும், மாடல் அழகிகளும் பங்கேற்பதும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கான மவுசை அதிகரித்துள்ளது.

கவனத்தை ஈர்த்த ருச்சி குஜ்ஜர்:

கேன்ஸ் திரைப்பட நிகழ்வில் பங்கேற்கும் திரைநட்சத்திரங்கள் ரெட் கார்பெட் வருகையினை காண ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், ரெட் கார்பெட்டில் மாடல் அழகியான ருச்சி குஜ்ஜரின் வருகை, சர்வதேச அளவில் பேசுப்பொருளாகியுள்ளது. அதற்கு காரணம் அவர் அணிந்திருந்த பிரம்மாண்டமான முத்து மாலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஓவியம் தத்ரூபமாகப் பொறிக்கப்பட்டிருந்தது தான்.

பிரதமர் மோடியின் தீவிர ரசிகை என உணர்த்தும் வகையில் ருச்சி குஜ்ஜர் இந்த மாலையை அணிந்து வந்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறுகையில், ”தான் பிரதமர் மோடியை ஒரு "உலகத் தலைவர்" மற்றும் "பெருமைமிகு இந்தியர்" என்று கருதுகிறேன். கேன்ஸ் போன்ற ஒரு சர்வதேச மேடையில், தனது அன்பையும், தேசப் பற்றையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த முத்து மாலையை அணிந்து வந்துள்ளதாக” தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ருச்சி குஜ்ஜாரின் செயல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிலர் ருச்சி குஜ்ஜரின் துணிச்சலையும், தேசப் பற்றையும் பாராட்டியுள்ளனர். மற்றவர்கள், கேன்ஸ் போன்ற ஒரு கலை விழாவில் அரசியல் அடையாளத்தை முன்னிறுத்துவது பொருத்தமானதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர். இருப்பினும், இந்த முத்துமாலை நிச்சயமாக கேன்ஸ் 2025 நிகழ்வின் இறுதியில் மிகவும் பேசப்பட்ட ஆபரணங்களுள் ஒன்றாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.

All We Imagine as Light:

விழாவின் மிக உயரிய விருதான பாம் டி'ஓர், மே 24 அன்று நடைபெறும் நிறைவு விழாவில் அறிவிக்கப்பட உள்ளது.கேன்ஸ் திரைப்பட விழாவின் விருதுக்கான பிரிவில் மிக முக்கியமானதாக கருதப்படும் Competition Section-இல் பாயல் கபாடியா இயக்கத்தில் உருவான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" (All We Imagine as Light) திரையிடப்பட்டது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பிரிவில் தேர்வான முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும். இதுவே இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.