சினிமா

'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்.. உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் அவசர முறையீடு செய்துள்ளது.

'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல்.. உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு!
JanaNayagan
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரித் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது.

சான்றிதழ் வழங்காததால் சிக்கல்

படத்திற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் தணிக்கைக்காக விண்ணப்பிக்கப்பட்டது. டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ், மாற்றங்களைச் செய்து மீண்டும் அனுப்பிய நிலையிலும், படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் சான்றிதழ் வழங்கப்படாமல் தாமதமாகியுள்ளது.

அவசர வழக்கு

இதனால், தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா முன்பு இன்று அவசரமாக முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி, வழக்கை உடனடியாகத் தாக்கல் செய்ய அனுமதி அளித்து, இன்று மதியம் 2.15 மணிக்கு வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளார்.