சினிமா

"சர்ச்சைகள் இல்லை... புரிதல் மட்டுமே தேவை"- 'பராசக்தி' விவகாரத்தில் சிவகார்த்திகேயன் விளக்கம்!

பராசக்தி திரைப்படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தெரிவித்தார்.


Sivakarthikeyan
மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 'பராசக்தி' திரைப்படக் குழுவினர் பங்கேற்றனர். இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், முதலில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குத் தனது பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

'எந்தவிதமான சர்ச்சையும் இல்லை'

தொடர்ந்து, 'பராசக்தி' திரைப்படத்தில் வரலாற்றைத் திரித்துக் காட்டியிருப்பதாகத் தமிழக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்துப் பேசிய அவர், இந்தப் படத்தில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மக்கள் இந்தப் படத்தை நேர்மறையான கண்ணோட்டத்திலேயே அணுகுவதாகவும், படக்குழு எந்த நோக்கத்திற்காக இந்தப் படத்தைப் படைத்ததோ, அது மக்களைச் சரியாகச் சென்றடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், "திரைப்படத்தை மக்கள் முழுமையாகப் பார்த்தால், அதன் உண்மைத்தன்மையை உணர்ந்து கொள்வார்கள்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எந்த அரசியல் நோக்கமும் இல்லை

மேலும் அவர், "எனக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. விஜய்யின் அரசியல் பயணத்துக்கு நான் தனிப்பட்ட முறையிலும், சமூக ஊடகங்களிலும் வாழ்த்து தெரிவித்தேன். அவருடைய படம் விரைவில் வெளியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.