சென்னை: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், பால சரவணன், காளி வெங்கட், சஞ்சனா, சுவாஸிகா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் லப்பர் பந்து. கடந்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான லப்பர் பந்து திரைப்படம், எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் பெரிதாக ப்ரோமோஷனே இல்லாமல் வெளியானது. ஆனால் ரசிகர்களின் பாசிட்டிவான விமர்சனம் லப்பர் பந்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியது.
ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் இருவருக்கும் கிரிக்கெட் விளையாடும் போது ஈகோ கிளாஸ் ஆகிறது. இதுவே ஹரிஷ் கல்யாண் – சஞ்சனா காதலுக்கு எதிராக மாற, இறுதியில் என்ன ஆனது என்பது தான் லப்பர் பந்து படத்தின் கதை. கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தாலும், அட்டக்கத்தி தினேஷ் – சுவாஸிகா, ஹரிஷ் கல்யாண் – சஞ்சனா என இந்த இரண்டு ஜோடிகளின் காதல் காட்சிகளும் ரசிகர்களிடம் செமையாக ஸ்கோர் செய்தன. அதேபோல், காமெடி காட்சிகள், படம் முழுக்க வரும் கேப்டன் விஜயகாந்தின் ‘பொட்டு வைத்த தங்கக் குடம்’ பாடலும், அவரது போஸ்டர்களும் மாஸ் ரகம்.
கெத்து என்ற கேரக்டரில் விஜயகாந்த் ரசிகனாக அட்டகத்தி தினேஷும், அன்பு என்ற கேரக்டரில் விஜய் ரசிகனாக ஹரிஷ் கல்யாணும் பட்டையை கிளப்பியிருந்தனர். கதை, திரைக்கதை, மேக்கிங் என அனைத்தும் லப்பர் பந்து படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதனால் லப்பர் பந்து திரைப்படம் இதுவரை 40 கோடி ரூபாய் வரை வசூல் செய்து கெத்து காட்டியது. இந்நிலையில், லப்பர் பந்து திரைப்படம் தற்போது ஓடிடி ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது.
முதலில் இந்தப் படம் அக்.18ம் தேதி சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும், ஆனால், இது இந்தியாவில் மட்டும் இப்போதைக்கு பார்க்க முடியாது என்றும் சொல்லப்பட்டது. அதன்பின்னர் திடீரென இந்த முடிவை மாற்றிய படக்குழு, தற்போது புதிய தேதியை அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டின் படி, லப்பர் பந்து திரைப்படம் வரும் 31ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ஓடிடியில் வெளியாகிறது. அதாவது ஹாட்ஸ்டார், சிம்பிளி சவுத் என இரண்டு ஓடிடி தளங்களிலும் லப்பர் பந்து படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதேபோல், தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளிலும் லப்பர் பந்து திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. இதனால் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் லப்பர் பந்து படம் சிக்ஸர் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி தினத்தில் சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர், கவின் நடிப்பில் பிளடி பெக்கர் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இந்தப் பக்கம் ஓடிடியில் லப்பர் பந்து படம் வெளியாகவுள்ளதால், ரசிகர்களுக்கு தரமான தீபாவளி ட்ரீட் காத்திருக்கிறது.