சினிமா

'ஜானகி vs கேரளா ஸ்டேட்' பட விவகாரம்: CBFC-க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து திரையுலக அமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் கேரள உயர்நீதிமன்றம், CBFC-யின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

'ஜானகி vs கேரளா ஸ்டேட்' பட விவகாரம்: CBFC-க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
janaki vs state of kerala film release issue
குறிப்பாக தென்னிந்திய இயக்குநர்கள் இயக்கும் படங்களுக்கு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் அதிகப்படியான நெருக்கடிகளை சமீப காலங்களாக கொடுத்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், இயக்குநர் ராம் போன்றோர் வெளிப்படையாகவே தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர்.

ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா:

இந்நிலையில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படமான, ‘ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா’ (Janaki v/s State of Kerala) படத்தினை இயக்குநர் பிரவீன் நாராயணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படமானது நீதிமன்ற வழக்கு பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒன்லைன், ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நீதி நாடி சட்டப் போரட்டத்தினை மேற்கொள்கிறார். அவருக்கு சுரேஷ் கோபி மூத்த வழக்கறிஞராக வாதாடுகிறார்.

இப்படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி திரையில் வெளியிட திட்டமிடப்பட்டது. படத்திற்கு தணிக்கைக் குழு சன்றிதழ் தர மறுத்ததால், படத்தின் வெளியீடு ஜூன் 27 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அன்றும் CBFC-யுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் படம் திரையில் வெளியாகவில்லை.

ஏன் சான்றிதழ் தர மறுக்கப்படுகிறது?

என்ன பிரச்னை என்று பார்த்தால், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஜானகி என பெயர் வைத்தது தானாம். படத்தின் பெயரையும், படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஜானகியின் பெயரையும் மாற்றினால் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க CBFC தயாராக இருக்கிறது. ஆனால், படத்தின் பெயரை, கதாபாத்திரத்தின் பெயரினை மாற்றுவது படத்தின் ஆன்மாவை பாதிக்கும் என படக்குழு கருதுகிறது. மேலும், படைப்பாளர்களின் கருத்து சுதந்திரத்தில் CBFC தலையீடுகிறது என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், படக்குழு கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நேற்று நடந்த விசாரணையின் போது, இந்திய தணிக்கை குழு வாரியத்தை கேரள உயர்நீதிமன்றம் அதிரடி கேள்விகளால் துளைத்துள்ளது.

”அனைத்து இயக்குநர்களுக்கும், என்ன பெயர் வைக்க வேண்டும், என்ன கதை சொல்ல வேண்டும் என பாடம் எடுப்பீர்களா? ஜானகி என்ற பெயரில் என்ன சிக்கல்? பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி நீதிக்காக போராடுபவருக்கு ஜானகி என பெயர் வைப்பதில் என்ன ஆகிவிடபோகிறது? பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு ராமா, கிருஷ்ணா என பெயர் சூட்டக்கூடாதா? கலைத்துறையினரின் சுதந்திரத்தில், நீங்கள் தலையிடக்கூடாது. இதையெல்லாம் ஒரு காரணமாக வைத்து, படத்தின் கதாப்பாத்திரப் பெயரை மாற்ற நெருக்கடி தரக்கூடாது” என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், வருகிற ஜுலை 2 ஆம் தேதிக்குள் விரிவான விளக்கத்தை தருமாறு, இந்திய துணை சொலிசிட்டர் ஜெனரலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், படக்குழுவிற்கு தீர்ப்பு தங்கள் பக்கம் வரும் என கொஞ்சம் நம்பிக்கை பிறந்துள்ளது.

முன்னதாக 'ஜானகி vs கேரளா ஸ்டேட்' படக்குழுவிற்கு ஆதரவாக ஒட்டுமொத்த மலையாள திரைப்பட அமைப்பான AMMA மற்றும் FEFKA போன்றவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.