சினிமா

தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்' ரிலீஸ்?.. தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்!

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்' ரிலீஸ்?.. தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்!
JanaNayagan Case
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி, பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ள நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய அவசர வழக்கு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தாமதத்திற்குக் காரணம் என்ன?

மதியம் 2.30 மணியளவில் நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர், "ஜன நாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கேட்டு மறு ஆய்வுக்காக தணிக்கை வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக தெரிவித்து சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. 3 காட்சிகளை நீக்க கோரினார்கள். குறிப்பிட்ட 3 காட்சிகளையும் நீக்கிவிட்டு மீண்டும் தணிக்கைக்கு அனுப்பினால், மறு ஆய்வு குழுவிடம் செல்லுமாறு கூறுகிறார்கள். படத்தை 9 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம். வேண்டும் என்றே தாமதப்படுத்துகிறார்கள்” என்று வாதாடினார்.

நீதிமன்றத்தில் கேள்வியும் உத்தரவும்

சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் சுந்தரேசன், “படத்தை 9 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துவிட்டு, அதன்பிறகு தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பித்து, உடனடியாக தணிக்கை செய்து கேட்கிறார்கள். அது எப்படி முடியும்” என்று கேள்வி எழுப்பினார். உடனே நீதிபதி பி.டி.ஆஷா, “ஏன் நீங்கள் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பினீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மத உணர்வைப் புண்படுத்தும் காட்சிகள் தொடர்பான புகாரைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, "படத்தை ஏன் 10 ஆம் தேதி தள்ளி வைக்க கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே? என பட தயாரிப்பு நிறுவனம் தரப்பிடம் கூறினார். அதற்கு, படம் வெளியாகும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக பட்ச் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணையை நீதிபதி, நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.