சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கங்குவா. சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மட்டுமின்றி, இந்தியாவில் பல மொழிகளில் ரிலீஸாகிறது. அதேபோல் உலகளவிலும் ஒட்டுமொத்தமாக 32 மொழிகளில் கங்குவா ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஃபேண்டஸி ஆஹ்ஷன் த்ரில்லர் படமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் திஷா பதானி கதாநாயகியாவும் பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். 2022ல் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படியான சூழலில் சூர்யாவின் கங்குவா படம் வெளியாவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடனை திருப்பித் தராததால் கங்குவா படத்தின் ரிலீஸுக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் அளித்த புகார் மனுவில், “டெடி 2, எக்ஸ் மீட் ஓய், தங்கலான் பட தயாரிப்பு பணிக்காக என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 99 கோடி 22 லட்சத்து 49 ஆயிரம் கடன் பெற்றிருந்தார்.
இதில், ரூ.45 கோடி அவர் திருப்பி செலுத்திய நிலையில் மீதமுள்ள ரூ.55 கோடி யை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளார். எனவே அவர் மீத தொகையை திருப்பித் தராமல் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அதேபோல் அவரது நிறுவன தயாரிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்த போது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் 18 கோடியை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்தி விட்டதால், தங்கலான் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட ஆட்சேபமில்லை என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் தெரிவித்தார். இதனையடுத்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், மீதத்தொகை நாளைக்குள் வழங்கப்படும் என உறுதி தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பாக்கித் தொகையை செலுத்தியது குறித்து தெரிவிக்கும் வகையில், வழக்கின் விசாரணையை நாளை (நவ. 08) பிற்பகலுக்கு தள்ளிவைத்தார். இந்நிலையில் நாளை பணம் செலுத்தப்படும் பட்சத்தில், கங்குவா படம் திரைக்கு வர எந்த தடையும் இருக்காது எனத் தெரிகிறது.