ஆஸ்கர் நாயகனாக, இசைப் புயலாக, தன் தனித்துவ இசையால் யாருக்கும் தான் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் வாங்காத விருதுகளும் இல்லை, செய்திடாத சாதனைகளும் கிடையாது. எப்போதும் சாந்த சொரூபமாக புன்னகை சிந்தியபடி வலம் வரும் ஏஆர் ரஹ்மானை, பெரிய பாய் என்று அவரது ரசிகர்கள் அழைப்பதுண்டு. “காதல் ரோஜாவே”, “காதல் சடுகுடு”, “மன மன மெண்டல் மனதில்”, “என்னை இழு இழு இழுக்குடி” என 90ஸ் முதல் ஜென்ஸி கிட்ஸ்களின் காதலுக்கு, தனது இசையால் மீனிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஆனால், அவரது நிஜவாழ்க்கையில், காதல் பொய்த்துப் போக, மனம் நொறுங்கி போனார் இசைப்புயல்.
29 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்து தாங்கள் விடைபெறுவதாக ஏ.ஆர்.ரகுமானின் மனைவி அறிவித்தது, ரசிகர்களை பேரதிர்ச்சியாக்கியது. இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து அதிகரித்துவிட்டாலும், சினிமா பிரபலங்கள் என்றால் அவர்களைப் பற்றிய விவாவதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் பஞ்சமே கிடையாது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?, ஏ.ஆர்.ரஹ்மானிடம் வேலை பார்க்கும் மோகினி டே-வும், அதே நேரத்தில் தன்னுடைய விவாகரத்தை அறிவிக்க, இதனால் பல சர்ச்சைகளும், உண்மைக்கு புறம்பான செய்திகளும் சமூக வலைத்தளங்களில் புயலாய் சுழன்றன.
இதனால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான், தனக்கு எதிராக எழுதப்பட்ட, வெளியிடப்பட்ட பொய்யான, தவறான செய்திகளை உடனே நீக்க வேண்டும் என 1 மணி நேரம் டைம் கொடுத்தார். மேலும், அப்படி நீக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸ் விட்டிருந்தார். இதனையடுத்து இந்த சர்ச்சை சூறாவளிகளை ஏ.ஆர்.ஆர் தனியாக சமாளிப்பதை பார்த்த மனைவி சாய்ரா, அவருக்கு ஆதரவாக ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். என்னத்தான், கணவன் – மனைவி பிரிந்தாலும் அவர்களுக்குள்ளான புரிதல் இருப்பதைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், அவர்களின் பிள்ளைகளும் தங்கள் பெற்றோருக்கு ஆறுதலாக பதிவிட்டு வந்தனர்.
இந்த விவாகரத்து சர்ச்சை சற்றே ஓய்ந்துள்ள நிலையில், மீண்டும் ஏ.ஆர்.ரகுமான் ஃபார்முக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் விதமாக, காதலிக்க நேரமில்லை படத்தில் “என்னை இழு இழு இழுக்குதடி” பாடல் மூலம், இளசுகளை திணறடித்தார். பெரிய பாய் இஸ் பேக் என ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சித் தரக்கூடிய முடிவை ஏ.ஆர்.ரகுமான் எடுத்துள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, குடும்ப விவகாரத்துக்குப் பின்னர், திரையிசையில் ஏஆர் ரஹ்மான் சுத்தமாக ஆர்வம் இழந்து விட்டதாகவும், சூர்யாவின் 45வது படம் உட்பட, அவர் ஒப்புகொண்ட் சுமார் 5 படங்களின் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அநேகமாக தமிழில் ஏ.ஆர். ரஹ்மான் கடைசியாக இசையமைக்கும் படம் மணிரத்னம், கமல் கூட்டணியின் ‘தக் லைஃப்’ ஆகத்தான் இருக்கும் என்கிறார்கள். மணிரத்னத்தின் ரோஜா படத்தில் தொடங்கிய இந்த ஆஸ்கர் நாயகனின் பயணம், மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தோடு முற்றுப்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது, தக் லைஃப் படத்தின் பின்னணி இசையமைக்கும் பணிகள் முடிந்தவுடன், துபாய் அல்லது அமெரிக்காவில் செட்டில் ஆகும் முடிவில் இருக்கிறாராம் இசைப்புயல். ஆனால், இதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் உண்மை என்னவென்பது தெரியும்.