சினிமா

சிவகார்த்திகேயன் பிறந்தநாள்: ‘பராசக்தி’ மேக்கிங் வீடியோ வெளியிட்டு சுதா கொங்கரா வாழ்த்து

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி ‘பராசக்தி’ படத்தின் மேக்கிங் (Making) வீடியோவை பகிர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சிவகார்த்திகேயன் பிறந்தநாள்: ‘பராசக்தி’ மேக்கிங் வீடியோ வெளியிட்டு சுதா கொங்கரா வாழ்த்து
சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சுதா கொங்கரா

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ’எஸ்.கே.23’ படத்திலும் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ திரைப்படத்திலும் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படமானது 1965-ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ’பராசக்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு சமீபத்தில் டீசருடன் வெளியானது. மேலும், இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் முதல்  முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'பராசக்தி’ படத்தின் மேக்கிங் (Making) வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹீரோ! சிவகார்த்திகேயன். உங்களுடன் இணைந்து பணிபுரிவதில் முழுமையான மகிழ்ச்சி. ஏனென்றால் இந்த பயணமும், கூட்டணியும் தான் சினிமாவை தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.