சினிமா

தனுஷ் குறித்து பரவிய சர்ச்சை செய்தி.. நடிகை மான்யா ஆனந்த் விளக்கம்!

நடிகை மான்யா ஆனந்த், தனக்கு வந்த அட்ஜெஸ்ட்மென்ட் அழைப்பு குறித்துப் பேசிய நிலையில், அதில் எழுந்த சர்ச்சை தொடர்பாகத் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தனுஷ் குறித்து பரவிய சர்ச்சை செய்தி.. நடிகை மான்யா ஆனந்த் விளக்கம்!
Actress Manya Anand explains
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்துப் பிரபலமான சின்னத்திரை நடிகை மான்யா ஆனந்த், தனக்கு வந்த அட்ஜெஸ்ட்மென்ட் அழைப்பு குறித்துப் பேசிய நிலையில், அதில் எழுந்த சர்ச்சை தொடர்பாகத் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை மான்யா ஆனந்த்தின் பேட்டி

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு நடிகை மான்யா ஆனந்த் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் அவர் தனக்கு வந்த 'அட்ஜெஸ்ட்மென்ட்' அழைப்பு குறித்துப் பேசியிருந்தார். தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நபர் தனக்கு மெசேஜ் செய்ததாகவும், அவர் தன்னைத் தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் மான்யா ஆனந்த் தெரிவித்திருந்தார். ஆனால், அதில் நடிக்கத் தனுஷுடன் 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வேண்டும் என்று அந்த நபர் கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்ச்சை குறித்து மான்யா ஆனந்த் விளக்கம்

நடிகை மான்யா ஆனந்த், தனுஷின் மேலாளர் பெயரைச் சொல்லி கருத்து கூறியது சர்ச்சையான நிலையில், தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அவர் தற்போது விளக்கமளித்துள்ளார். "தான் நேர்காணலில் தனுஷின் மேலாளர் ஷ்ரேயஸ் என்று கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், போலி நபராக இருக்கலாம் எனவும் தான் தெரிவித்து இருந்தேன். தனுஷின் மேலாளர் என்று திட்டவட்டமாக நான் குறிப்பிடவில்லை. எனவே யாரும் பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம்" எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டே தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ், "நடிகர் தனுஷின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக என் பெயரையும் தொடர்பு எண்ணையும் பயன்படுத்தினால் அது போலியானது. அதில் உண்மையில்லை" எனப் பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.