Sakthi Subramaniam About Actor Rajinikanth : திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் புதிதாக ஐந்து திரைகள் கொண்ட உலக தரம் வாய்ந்த ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட அருணோதயா மல்டிபிளக்ஸ் திரையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் கலந்துகொண்டார்.
பின்னர் சக்தி சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொடர்ந்து விஜய் சினிமா துறையில் இருந்து விலகி விட்டு அரசியலில் கால் பதிக்க உள்ளார் இதன் காரணமாக திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என செய்தியாளர்கள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சக்தி சுப்பிரமணியம், “மக்கள் பிரம்மாண்டத்தை விஜய் விரும்புகிறார். பான் இந்தியா (PAN INDIA) படங்கள் வந்து கொண்டிருக்கிறது. யாரோ ஒருத்தரை நம்பி சினிமாத்துறை இல்லை யார் வந்தாலும் போனாலும் சினிமா மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.
வேட்டையன் படம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜெயிலர் படத்தை விட வேட்டையன் படம் மிக நன்றாக இருக்கும் என்றும் அவர் இன்னும் இளமையாக தான் இருக்கிறார் பெரிய ஓப்பனிங் உண்டு” என்று தெரிவித்தார்.
மேலும், ரஜினிக்கு தற்பொழுது உடல்நிலை சரியில்லாத நிலையில், அவர் அடுத்தடுத்த படங்கள் நடிப்பாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ரஜினிகாந்த் குதிரை போல... விழுந்தாலும் உடனே வெற்றி பெற்று விடுவார்..” என கூறினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வயிறு வலியுடன் ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து ரஜினிகாந்திற்கு, அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் ஸ்டென்ட் (Stent) மட்டும் பொருத்தப்பட்டுள்ளதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது. அதன் பின்னர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்டோபர் 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.