சென்னை: பான் இந்தியா ஹீரோவாக மாஸ் காட்டி வரும் பிரபாஸ், தற்போது பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கல்கி 2898 AD மூவி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸுடன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி கேமியோவாக ராஜமெளலி, துல்கர் சல்மான், ராம் கோபால் வர்மா, மிருணாள் தாகூர் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். புராண கதையையை இப்போதுள்ள ரசிகர்களுக்கு ஏற்றபடி சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் இயக்கியுள்ளார் நாக் அஸ்வின்.
பான் இந்தியா படமாக ரிலீஸாகியுள்ள கல்கி 2898 AD படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் அட்வான்ஸ் புக்கிங் மூலமாகவே 55 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது கல்கி 2898 AD. இந்நிலையில், நேற்று ஆயிரக்கணக்கான ஸ்க்ரீன்களில் ரிலீஸான கல்கி 2898 AD கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளதாகவே தெரிகிறது. அதன்படி இந்தப் படம் முதல் நாளில் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மட்டும் 95 முதல் 110 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், தெலுங்கில் 65 கோடியும், தமிழ்நாட்டில் 5 கோடியும், இந்தியில் 24 கோடி வரையும் வசூல் செய்துள்ளதாம். மலையாளத்தில் 2 முதல் 3 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தியா தவிர்த்து உலகின் மற்ற நாடுகளில் 65 முதல் 75 கோடி வரை வசூல் கிடைத்துள்ளதாம். இந்த தகவல்களின்படி ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது கல்கி. இதுகுறித்து அபிஸியலாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், முதல் நாளில் கல்கி படத்துக்கு கிடைத்துள்ள ஓபனிங், தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆறுதலாக அமைந்துள்ளதாம்.
அதேபோல், இரண்டாவது நாளான இன்றும் கல்கி படத்தின் ஆன்லைன் புக்கிங் 90 சதவீதம் வரை காணப்படுகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கல்கி படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக டிக்கெட் புக் செய்து வருகின்றனர். இதனால் கல்கி 2898 AD முதல் 4 நாட்களில் ஆயிரம் கோடி வசூலை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸின் சலார் 700 கோடி மட்டுமே கலெக்ஷன் செய்திருந்தது. முன்னதாக இந்தப் படம் 1000 கோடி வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறியிருந்தன. அப்போது ஏமாற்றிய பிரபாஸ், கல்கி 2898 AD மூலம் சாதிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.