ஆன்மிகம்

அண்ணாமலையார் கோயில்: ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை.. பக்தரின் செயலால் நெகிழ்ச்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் வைரக்கல், பச்சைக்கல், மரகத பச்சை ஆகியவற்றினால் ஆன தங்க ஆபரணங்களை பக்தர் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

அண்ணாமலையார் கோயில்: ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை.. பக்தரின் செயலால் நெகிழ்ச்சி
திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்து அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து செல்கின்றனர்.

மாதந்தோறும் பெளர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு லட்சகணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் மேற்கொள்கின்றனர். கார்த்திகை தீப திருவிழா, சித்ரா பெளர்ணமி போன்ற விழாக்கள் இக்கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாப்படுகிறது.

இந்நிலையில், பக்தர் ஒருவர் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு 750 கிராமில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை வழங்கிய சம்பவம் பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது. திருவண்ணாமலை மாநகரில் உள்ள குமரக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆசிரியர் குமார். தீவிர அருணாசலேஸ்வரர் பக்தரான இவர் 750 கிராமில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில்
தங்கத்தினால் ஆன மகரகண்டி என்று அழைக்கக்கூடிய பல்வேறு செம்புகல், பச்சைக்கல், வைரக்கல், மரகத பச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான கற்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட தங்க மாலையை அருணாசலேஸ்வரருக்கு வழங்கினார்.

கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து பின்னர் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனியிடம் குமார் குடும்பத்தினர் இந்த நகைகளை ஒப்படைத்தனர். குமாரின் இந்த செயலால் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.