ஆன்மிகம்

96 அடி உயரம். 350 டன் எடை.. கோலாகலமாக தொடங்கியது திருவாரூர் ஆழித் தேரோட்டம்..!

உலகப் புகழ் பெற்ற 96 அடி உயரமும், 350 டன் எடையளவும் கொண்ட திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் 2000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 96 அடி உயரம். 350 டன் எடை.. கோலாகலமாக  தொடங்கியது திருவாரூர் ஆழித் தேரோட்டம்..!
கோலாகலமாக தொடங்கியது திருவாரூர் ஆழித் தேரோட்டம் !

உலகில் காணும் தேர்களில் ஆழி என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் திருவாரூர் ஆழித்தேர் மற்ற தேர்களை காட்டிலும் வித்தியாசமான தேரின் கட்டுமானமும், தேரின் முன்புறம் நிறுவப்படும் பிரமாண்டமான கலைநயமிக்க குதிரை பொம்மைகளுடன் 350 டன் எடையளவு கொண்ட ஆழித்தேர் வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம் உலகின் முதல் கோவில் எனவும், பூமிக்குரிய ஸ்தலமாகவும், விளங்கும் சிறப்புவாய்ந்த ஆலயமாகும். பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்வாலயத்தின் வருடாந்திர பங்குனி உற்சவமானது கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவாரூர் என்றால் தேரழகு என்பதற்கு ஏற்ப பங்குனி உற்சவ பெருவிழாவின் சிறப்பு விழாவான ஆயில்ய நட்சத்திரத்தன்று உலக பிரச்சித்தி பெற்ற ஆழித்தேரோட்டத்தினை பற்றியும், தேர் அசைந்துவருவது குறித்து பெரியபுராணத்திலும், ஆலய கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய தேரானது மற்ற தேர்களின் வடிவமைப்பினை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமாக காணப்படுவதால் திருவாரூர் தேர் "ஆழி" என அடைமொழியோடு அழைக்கப்படுகிறது. திருவாரூர் ஆழித்தேரானது அதனுடைய மரபீடத்தின் வடிவமைப்பும், அதில் காணும் 400க்கும் மேற்பட்ட கலைநயமிக்க சிற்பங்களும், எண்கோண வடிவில் காணும் வடிவமைப்பும் ஆழித்தேர் சிறப்பை எடுத்துரைக்கிறது.

96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்ட பிரமாண்டமாக ஆழித்தேர் விதியில் வலம் வருவதையும், வீதிகளில் தேர் திரும்பும் காட்சியும் பார்க்க பிரமிப்பை ஏற்படுத்தும். தேரின் முன்பக்கம் 4 வேதங்களை அடிப்படையாக கொண்டு பிரமாண்ட வகையில் வடிவமைக்கப்பட்ட 4 குதிரைகள் கட்டப்பட்டு பிரம்மா தேரையொட்ட தேர் பாய்ந்து செல்வது போல் நம் கண்முன் வடிவமைத்து காட்சிபடுத்துப்பட்டுள்ளது.

தேரின் எடை இரும்பு அச்சுகள், தேர்சக்கரங்கள் உள்பட 220 டன்களும், 50 டனுக்கு மேற்பட்ட எடைகொண்ட மூங்கில்கள், இதுதவிர பணஞ்சப்பை, சவுக்குமரங்கள், கயிறு மற்றம் தேர் அலங்கரிக்கப்படுவதற்கான தேர் சீலைகள், 4 பிரமாண்டமான குதிரைகள், யாழிகள், பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் ஆகியவற்றை சேர்க்கும்போது தேரின் மொத்த எடையளவானது 350 டன்னை எட்டுகிறது.

சுமார் 350 டன் எடையளவு கொண்ட ஆழித்தேர் வீதிகளில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்து செல்ல ஏதுவாக 4 டன் எடையளவு கொண்ட ஒவ்வொரு வடமும் சுமார் 240 அடி நீளம் கொண்ட 4 பிரமாண்டமான வடங்கள் கட்டப்பட்டு தேரின் வடத்தினை பற்றி சுமார் 4000த்திற்கும் மேற்பட்ட பக்தர்களால் இழுக்கப்பட்டு தேர் வீதிகளில் வலம்வருகிறது. பக்தர்கள் தேரை இழுப்பதற்கு ஏதுவாக தேர் சக்கரங்களை உந்த செய்யும் வகையில் 2 புல்டோசர் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் தேர் வீதிகளில் சீராக செல்லும் வகையிலும் தேர் வீதிகளில் செல்லும்போது அதன் வேகத்தை முறைப்படுத்திடவும் தேரின் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டு தேரோட்டம் நடைபெறுவது வேறு எங்கும் காணமுடியாத காட்சி.

தேரோட்டத்திற்கு நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், தேர் வீதிகளில் மையமாக செல்ல ஏதுவாக தேர்கொத்தனார்கள் மரத்திலான நூற்றுக்கணக்கான முட்டுகட்டைகளை தேர் சக்கரங்களின் அடியில் வைத்து முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தி வருகின்றனர். ஆழித்தேரோட்ட விழாவில் மொத்தமாக ஆழித்தேரையும் சேர்ந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் ஆலய வீதிகளில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி வலம் வர உள்ளன.