Sarathkumar: ஹேமா கமிட்டி... கேரவனில் கேமரா... பிக் பாஸ் நடிகை யார்..? ரவுண்டு கட்டிய சரத்குமார்!
மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவங்கள் குறித்து வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து பேசிய நடிகர் சரத்குமார், கேரவனில் கேமரா இருந்தது பற்றிய ராதிகாவின் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.
: மலையாள திரையுலகில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்து ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை, மலையாளம் மட்டுமின்றி கோலிவுட், டோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட்டைச் சேர்ந்த நடிகைகள் சிலரும் ஹேமா கமிட்டியில் புகார் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் மலையாள ஹீரோ நிவின் பாலி முதல் முன்னணி நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குகள் பாய்ந்துள்ளன.
இந்நிலையில், ஹேமா கமிட்டி குறித்து நடிகர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹேமா கமிட்டி அறிக்கையில் மொத்தம் 281 பக்கங்கள் உள்ளன, அதில் 160 பக்கங்களை மட்டுமே நான் படித்துள்ளேன். இந்த அறிக்கை தொடர்பாக விலாவரியாக பேச வேண்டியுள்ளது, முக்கியமாக பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து ஹேமா கமிட்டி விரிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், கேரவனில் கேமரா இருக்கலாம் என நடிகைகள் அச்சப்படுவதாகவும் ஹேமா கமிட்டியின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதேபோல், இச்சம்பவத்தில் கேரள நடிகர்களுக்கு தொடர்பு இருப்பதாக வரும் குற்றச்சாட்டுகள் குறித்து பொத்தம் பொதுவாக கருத்து சொல்ல முடியாது. அவர்கள் தவறு செய்துள்ளார்களா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டியது கடமை. மேலும் சினிமாவில் மட்டும் இல்லை, எல்லா துறைகளிலும் பெண்கள் பாலியல் தொல்லை ஆளாக்கப்படுகின்றனர் எனவும், நாம் தான் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கிறது என்று தெரிந்தால் தான் இதை திருத்த முடியும் எனவும் சரத்குமார் குறிப்பிட்டார்.
அப்போது அவரிடம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டது. கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், தெலுங்கு ஹீரோ ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை விசித்ரா கூறியிருந்தார். அப்போது இதுபற்றி நடிகர் சங்க பொறுப்பில் இருந்த சரத்குமாரிடம் கூறியதாகவும், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். பிக் பாஸில் விசித்ரா முன்வைத்த இந்த குற்றச்சாட்டு ரொம்பவே வைரலானது. இதனை குறிப்பிட்டே சரத்குமாரிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சரத்குமார், நான் பிக் பாஸ் பார்ப்பது கிடையாது எனவும், எந்த நடிகையும் யாரும் என்னிடம் புகார் கொடுத்தது இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், என்னிடம் புகார் கொடுத்தால் அடுத்த நிமிடமே நான் நடவடிக்கை எடுப்பவன் நான். மற்றவர்களை போல் சாதாரண தலைவன் கிடையாது என்றும் தெரிவித்தார்.
அதேபோல், கேரவனில் கேமரா வைக்கப்பட்டது குறித்து ராதிகா தெரிவித்த குற்றச்சாட்டுக்கும் சரத்குமார் விளக்கம் கொடுத்தார். அதில், கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, கேரவனில் கேமரா வைக்கப்பட்டது குறித்து ராதிகா அப்போது புகார் தெரிவிக்காமல் இருந்தார். இந்தச் சம்பவத்தை கடந்து போகும் துணிச்சல் அவரிடம் இருந்ததால், அப்போது இதுகுறித்து புகார் தெரிவிக்கவில்லை. யாராக இருந்தாலும் இதுபோன்ற பிரச்சினைகளை கடந்துபோக வேண்டும், இல்லையென்றால் அதனை எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும் எனவும் சரத்குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
What's Your Reaction?