தமிழ்நாடு

10 ஆயிரம் போலி ஆசிரியர்களா?.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் சுமார் 11 ஆயிரம் போலி ஆசிரியர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

10 ஆயிரம் போலி ஆசிரியர்களா?.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்
சுமார் 11 ஆயிரம் போலி ஆசிரியர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்

அண்மைக்காலமாக தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் தங்களுக்கு பதிலாக ஆசிரியர்கள் வேறு நபரை போலியாக தங்கள் ஆசிரியர்  பணியிடத்தில் அமர்த்தி சொந்த பணத்திலிருந்து ஊதியம் வழங்கி பணியாற்ற வைப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

அண்மையில் தர்மபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட இராமியம்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த கே.பாலாஜி என்பவர் ஒழுங்காக பள்ளிக்கு வராமலும் தனக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியரை போலியாக நியமித்து பணியாற்ற வைத்திருப்பதை கண்டறிந்த தொடக்கக் கல்வித் துறை அவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தோம். அப்போது தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 34 ஆயிரத்து 855 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 9ஆயிரத்து 248 நடுநிலை பள்ளிகள் செயல்படுவதாக தெரிவித்தனர்.

அதில் குறிப்பாக தொடக்க பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிபுரியும் சுமார் 11 ஆயிரம் ஈராசிரியர் பள்ளிகளில் பத்தாயிரம் பள்ளிகளில் தங்களுக்கு பதிலாக போலியாக ஆசிரியர்களை   நியமித்து பணியாற்ற வைப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இவ்வாறு பணியாற்ற வைப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு  அந்தந்த கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தொடக்கக் கல்வித் துறை வட்டார கல்வி அலுவலர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் பணம் வழங்கப்படுவதாகவும் தகவல்களை தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு பள்ளிக்கு வராமல் தங்களுடைய சொந்த வேலைகளை பார்த்துக் கொண்டு அரசை ஏமாற்றி வரும் ஆசிரியர்களின் இந்த சர்ச்சை விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மதமதியிடம் பேசினோம்.

இதுகுறித்து விளக்கம் அளித்து பேசிய துறை செயலாளர், ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பம்மத்துகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காண்பித்து முறைகேடில் ஈடுபட்ட விவகாரத்தில் வட்டார கல்வி அலுவலர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியரரை பணியிட நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அதே போன்று விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இதே போன்று மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக அதிகரித்து காண்பித்த விகாரத்தில்  வட்டார கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த முறைகேடு விவகாரங்களை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி துறையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளிலும், வட்டார கல்வி அலுவலகங்களிலும் ஆய்வு பணியை தொடங்க உள்ளதாகவும், போலி ஆசிரியர்கள் விவகாரமும் தன்னுடைய கவனத்திற்கு தற்போது வந்துள்ளதால் இது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று குறிப்பிட்டார். மேலும், தவறு செய்த ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போன துறை சார்ந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்..

மாணவ சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய ஆசிரியர்களே மாணவர்கள் பயில்கின்ற பள்ளிகளிலேயே இத்தகைய முறைகேட்டில் ஈடுபடுவது வளரும் நாளைய எதிர்காலமான மாணவர் சமுதாயத்திற்கு நல்லதல்ல. உடனடியாக அரசு இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.