தீரன் பட பாணியில் ஸ்கெட்ச்... விமானத்தில் வந்து கொள்ளை... யார் இந்த இராணி கொள்ளையர்கள்?
ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தால் 20 லட்சம் வரை கொள்ளையடிக்க வேண்டும் என, மாஸ்டர் பிளான் போட்டு விமானத்தில் பறந்து வந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் இரானி கொள்ளையர்கள் குறித்து, பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னையை, அதைவிட பரபரப்பாக்கியது அடுத்தடுத்து 7 இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவம். சொல்லி வைத்தது போல ஒரு மணி நேரத்திற்குள், வேறு வேறு இடங்களில் தனியாக சென்ற பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது, போலீஸாரையே தலை சுற்ற வைத்தது. ஆனாலும் துரிதமாக செயல்பட்ட போலீஸார், 7 இடங்களிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது மூன்று பேர் கொண்ட ஒரே கும்பல் தான் என்பதை கண்டுபிடித்ததோடு, விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற அவர்களை கடைசி நேரத்தில் கைது செய்தது. அதன்பின்னர் நகைகளை பறிமுதல் செய்ய சென்ற இடத்தில், கொள்ளையன் ஜாபர் போலீசாரை நோக்கி சுட்டதால், அவர் அதிரடியாக என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த நிலையில், இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது ஈரானிய கொள்ளையர்கள் என்றும், அவர்கள் பின்னணி பற்றியும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
அதாவது, 1970களில் ஈரான் நாட்டில் இருந்து 100க்கும் மேற்பட்டோர், தங்களது குடும்பத்தோடு மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கிருந்த அவர்களது வாரிசுகள் பலரும், ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் காரமடை, திருப்பத்தூர், மணப்பாறை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தோற்றத்தில் ராணுவ வீரர்கள் போல மிடுக்காக இருக்கும் இவர்களுக்கு, கொள்ளையடிப்பது தான் பிரதான தொழிலாம். அதனால் தான் இவர்களை ஈரானிய கொள்ளையர்கள் என போலீசார் கூறுகின்றனர்.
சாலையில் தனியாக செல்பவர்களின் கவனத்தை திசைத்திருப்பி, அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்வது, செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது தான் இவர்களது பாணி. இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், தீரன் பட பாணியில் முதலில் கொள்ளையடிக்க ஒரு ஊரையோ பகுதியையோ தேர்வு செய்வார்கள். பின்னர் அவர்களில் ஒரு குழுவினர், அந்த இடங்களுக்குச் சென்று பொதுமக்களின் நடமாட்டம் எப்படி இருக்கிறது, அருகில் காவல்நிலையம் இருக்கிறதா? என எல்லாவற்றையும் நோட்டமிட்டு, அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்துகொடுப்பார்களாம். அதேபோல், 1 லட்சம் செலவு செய்து திட்டம் தீட்டினால், அதற்கு பலனாக 20 லட்சம் வரையாவது கொள்ளையடிக்க வேண்டும் என்பது இவர்களின் எழுதப்படாத அஜெண்டா. இவர்களில் பலருக்கும் தமிழ், இந்தி, தெலுங்கு என உள்ளூர் மொழிகள் தெரியும் என்பதால், மக்களோடு மக்களாக கலந்து நோட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.
தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரத்தின் அம்பிவேலி, கர்நாடகத்தின் பிதர் பகுதிகளில் இந்த ஈரானிய கொள்ளையர்கள் தனியொரு கூட்டமாகவே வாழ்ந்து வருவதாக போலீஸார் கூறுகின்றனர். இந்த நிலையில், தற்போது என்கவுண்டர் செய்யப்பட்ட ஜாபர் மீது, இந்தியா முழுவதும் 150 வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாபருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதோடு, அவரின் மனைவி, தந்தை குலாம் இராணி ஆகியோர் மீதும் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. சமீபத்தில், MCOCA எனப்படும் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட அவர், சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
அதேபோல், மிசாமும் துஸ்வாசம் மேசம் இராணி என்பவர், அம்பிவலி என்னும் மிக நீண்ட குற்றப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. அவரது தந்தை அம்ஜத் இராணி, சகோதரர் அப்பாஸ் இராணி ஆகியோரும் 2021 முதல் MCOCA சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்படி இந்த ஈரனிய கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. மேலும் ஈரானிய கொள்ளையர்கள் 5 குழுக்களாக செயல்படுவதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
முதலில் சல்மான் என்பவர் சென்னைக்கு வந்து, தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளை நோட்டமிட்டு அவர்களது லொக்கேஷனை ஜாபர், சூரஜ் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். இவர்கள் ஒருநாளை முடிவு செய்து, அன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று கச்சிதமாக செயின் பறிப்பை முடித்துவிட்டு, நகைகளை சல்மானிடம் கொடுத்துவிடுவார்கள். அதன்பின்னர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் விமானம் மூலமாகவும், நகைகளை வைத்திருக்கும் சல்மான் ரயிலிலும் மும்பைக்கு தப்பிச் சென்றுள்ளனர். அங்கே நகைகளை உருக்கி அவர்களுக்குள் பங்கு வைத்துக்கொள்வார்களாம். இந்த திட்டம் சொதப்பி, எதிர்பாராத விதமாக அவர்கள் போலீஸாரிடம் சிக்கினால், ஜாமீனில் வெளியே எடுக்க தனியாக ஒரு வழக்கறிஞர்கள் குழுவையும் வைத்துள்ளது தான் செம ஹைலைட்.
இந்த நிலையில் தான், சென்னை போலீஸார் அவர்களை கொத்தாக தட்டித் தூக்கியுள்ளனர். அப்படி கைதான போது, “பல இடங்களில் கொள்ளையடித்துள்ளோம், ஆனால் இவ்வளவு வேகமாக யாரும் எங்களை யாரும் கைது செய்ததில்லை, நீங்க speed police என சென்னை காவல்துறையிடம் ஜாபர் கூறியுள்ளார். மற்றொரு குற்றவாளியான சூரஜ் என்கிற மேஷமுக்கு, ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. அதனால், அவரது மனைவி டிபன் பாக்ஸில் உணவுகளை கட்டிக்கொடுத்து கொள்ளையடிக்க அனுப்பி வைத்துள்ளார். போலீஸார் கைது செய்த போது அவரிடம் டிபன் பாக்ஸ் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு இடத்தில் கொள்ளையடித்தால், அடுத்த ஒரு வருடத்திற்கு அந்த பகுதிக்கு செல்வதை தவிர்த்துவிடுவது ஈரானிய கொள்ளையர்களின் வழக்கம். ஆனால், கடந்த முறை தாம்பரம் பகுதியில் கொள்ளையடித்த போது, போலீசார் அவர்களை நெருங்காததால் மீண்டும் சென்னை வந்து கைவரிசை காட்டியுள்ளனர். கடைசியில் அதுவே அவர்களுக்கு ஆப்பு வைத்துள்ளது. கிட்டத்தட்ட கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் பவாரியா கொள்ளை கும்பலை போல செயல்பட்டுள்ளனர் இந்த ஈரானிய கொள்ளையர்கள். பல மாநிலங்களில் தண்ணி காட்டிய பவாரிய கும்பலை, அவர்களது கோட்டைக்கே சென்று தட்டித் தூக்கியது தமிழக போலீஸார் தான். அதேபோல், இப்போது ஈரானிய கும்பலுக்கும் மரண பயத்தை காட்டியுள்ளது தமிழக போலீஸ் டீம்.
What's Your Reaction?






