சென்னை: இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு வெரைட்டியான படங்கள் காத்திருக்கின்றன. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா, இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. சுமன் குமார் இயக்கத்தில் கடந்த மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியான ரகு தாத்தா, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கீர்த்தி சுரேஷ் லீடிங் ரோலில் நடித்துள்ள ரகு தாத்தா, ஜீ 5 ஓடிடியில் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. தங்கலான், டிமாண்டி காலனி 2 படங்களுடன் திரையரங்குகளில் வெளியானது ரகு தாத்தா. இதனால், பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ள ரகு தாத்தா படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரகு தாத்தா வரிசையில் ஓடிடி ரசிகர்களுக்கு இன்னொரு ஸ்பெஷல் ட்ரீட் என்றால், அது நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்படம் தான். ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனம் கொடுத்திருந்தனர். வெங்கட் பிரபு தயாரித்த இத்திரைப்படத்தை ஆனந்த் ராம் இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருந்தார். இவருடன் கலக்கப்போவது யாரு பாலா, ஆர்ஜே விஜய், இர்ஃபான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சென்னை 28 மூவி போல ஜாலியான படமாக உருவான நண்பன் ஒருவன் வந்த பிறகு, இந்த வாரம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.
அதேபோல், விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா ரைஸிங் என்ற வெப் சீரிஸ், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. அபிராமி, ரம்யா நம்பீசன், சேரன், ஷாம், ஜான் விஜய், புகழ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரக் கூட்டணியின் நடிப்பில் உருவாகியுள்ளது இந்த வெப் சீரிஸ். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் கோலி சோடா ரைஸிங் வெப் சீரிஸ், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் ரவி தேஜா நடித்துள்ள மிஸ்டர் பச்சன் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் ஆக 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான மிஸ்டர் பச்சன் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள மிஸ்டர் பச்சன், இந்த வாரம் முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. அதேபோல், தெலுங்கில் நரேன் நித்தின், நயன் சரிகா ஆகியோர் நடித்துள்ள ஏய் (Aay) என்ற திரைப்படமும் இந்த வாரம் முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. மேலும் பென்ச் லைஃப் என்ற தெலுங்கு வெப் சீரிஸ், இந்த வாரம் முதல் சோனி லிவ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் பிஜு மேனன், ஆசிப் அலி, திலீஷ் போத்தன் நடித்துள்ள தலவன் (Thalavan) திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஜிஸ் ஜாய் இயக்கியுள்ள இந்தப் படம் அட்டகாசமான க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. திரையரங்குகளில் ரிலீஸான போதே சூப்பர் ஹிட் அடித்த தலவன், இப்போது ஓடிடி ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தலவன் திரைப்படம் இந்த வாரம் 9ம் தேதியே சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. அதேபோல், மலையாளத்தில் விஷேசம் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்திலும், ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள நுணாகுழி (Nunakuzhi) ஜீ5 ஓடிடியிலும் இந்த வாரம் வெளியாகிறது.
இந்தியில் இந்த வாரம் பெர்லின் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது. மேலும் செக்டர் 36 நெட்பிளிக்ஸிலும், Khalbali Records வெப் சீரிஸ் ஜீயோ ஓடிடியிலும் வெளியாகிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடி ரசிகர்களுக்கு Uglies, Officer Black Belt (Korean), Techno Boys (Spanish), Boxer ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. மேலும், InVogue என்ற வெப் சீரிஸும் இந்த வாரம் வெளியாகிறது. அமேசான் ப்ரைம் தளத்தில் தி மணி கேம் வெப் சீரிஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் The Seoul Busters என்ற கொரியன் வெப் சீரிஸ் ஆகியவையும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.