தவெக சார்பில் 2023 ஆம் ஆண்டு முதல் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 10, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கல்வி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தவெக ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு கட்சியின் தலைவராக ஜோசப் விஜய் இந்த விருதுகளை வழங்கி வந்தார். இந்த நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்பை ஏற்று, இந்த ஆண்டு முதல் முறையாகக் கல்வி விருது விழா நடத்தப்பட்டு வருகிறது.
2025-26 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்குத் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா, கடந்த 4-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பள்ளி இறுதித் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டு, மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
பின்னர், சாதனை மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கிப் பேசிய முதலமைச்சர் விஜய், இளைய சமூகத்தினருக்காகவே தான் அரசியலுக்கு வந்ததாகவும், போதை, லஞ்சம் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு ஆட்படக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, தவெக சார்பில் இரண்டாம் கட்டக் கல்வி விருது வழங்கும் விழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த விழா நடைபெறும் என்று தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் அறிவித்துள்ளார்.ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு விருதுகளைப் பெறுகின்றனர்.
விருதுகளைப் பெறும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் சிறப்பு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் விழாவில் கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார்.இதற்கான பொறுப்பு மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செல்போன், காகிதங்கள், பேனா போன்ற பொருள்களை எடுத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவிற்காக 30 தொகுதிகளை மாவட்ட வாரியாகப் பிரித்து, மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படுவது வழக்கமாகும்.ஆனால், சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று, முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், கல்வி விருது விழா சற்றுத் தாமதமாகவே நடைபெறுகிறது.அரசுப் பணிகள், தேர்தல் அறிவிப்புகளைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் கல்வி விருது வழங்கும் விழா ஏற்பாடுகள் தாமதமானதாகக் கூறப்படுகிறது.
LIVE 24 X 7









