தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நாளை முதல் அக்டோபர் 21-ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது, இன்று முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது. அடுத்த 2 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழையும், வெயிலும் மாறி மாறி இருக்கும். பல்வேறு இடங்களில் திடீர் மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டிற்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
போதிய மழையின்றி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், ஐந்து மாவட்ட மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இந்த முறை மழையின் அளவு குறைந்துள்ளது.
அக்டோபர் மாதத்திலும் வெயிலும், புழுக்கமும் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது தொடங்கவுள்ள வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய வரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 2 வாரங்களுக்கு எப்படிப்பட்ட மழை இருக்கும்?
நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்யாது. அவ்வப்போது திடீர் மழைப்பொழிவும், அதனைத் தொடர்ந்து மழை இடைவெளிகளும் இருக்கும்.
மழை பெய்யும் நேரமும், அதன் தீவிரமும் இடத்திற்கு இடம் மாறுபடும். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் இந்த நிலை தொடரும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
“எல்லா மழையும் வெள்ளத்தை ஏற்படுத்திவிடாது. நமக்கு இந்த மழை அவசியம். எனவே, வடகிழக்குப் பருவமழையை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ள பிரதீப் ஜான், மக்கள் வெளியே செல்லும்போது குடை அல்லது (RAIN COURT) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
LIVE 24 X 7









