தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், ‘தேனிசைத் தென்றல்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான தேவா சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், கானா பாடல்களைத் தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியதில் முக்கியப் பங்கையாற்றியவர். இதனால், ரசிகர்கள் அவரை ‘கானா தேவா”, “கானா இசை மன்னன்’ என்றும் அழைத்து வந்தனர்.
‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட பல படங்களின் பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் நீங்காத இடம்பிடித்தவர் தேவா. அவரது இசையில் உருவான பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
தேவாவின் மறைவுச் செய்தி தமிழ் திரையுலகிலும், இசை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக தலைவரான ஸ்டாலின் தேவாவின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியதாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.
எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.
குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.
நாயகர்களுக்கான mass பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.
எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.
ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.
தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
LIVE 24 X 7









