செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தனபால் - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, அரசுப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ஆம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டுப் பெற்றோருடன் தூங்கிய சிறுமி, மறுநாள் அதிகாலை மாயமாகியிருந்தார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததைத் தொடர்ந்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள், கிணறுகள், மலைப்பகுதிகள் மற்றும் புதர்களில் தீவிரமாகத் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வழக்கின் விசாரணையைச் சிபிசிஐடிக்கு மாற்றித் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில், சிபிசிஐடி டிஎஸ்பி கீதா மற்றும் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான குழுவினர் வழக்கு ஆவணங்களைப் பெற்று, சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியை வரைபடமாக்கி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் போக்சோ வழக்குகளில் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்துத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், குடும்பத்தினர் முதலில் வீட்டைச் சுற்றியுள்ள வயல்கள் மற்றும் கால்வாய்களில் தேடிய பிறகே காவல்துறையை அணுகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமி மாயமானது திட்டமிட்டு நடத்தப்பட்ட கடத்தலாக இருக்கலாம் என மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏதேனும் கும்பல் சிறுமியைக் கடத்திச் சென்றதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆலம்பூண்டி, திருவண்ணாமலை மற்றும் நடுப்பட்டு சாலைகளில் உள்ள சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதோடு, வழக்கின் சந்தேகத்தின் பேரில் சுமார் 600 செல்போன் அழைப்புப் பதிவுகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
LIVE 24 X 7









