ரூ.8 கோடி இழப்பு புகார்... வழக்கில் சிக்கிய தந்தை, மகன்!
கடந்த 2025 டிசம்பர் 14-ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டுக்காக, மலப்பம்பாடி ஏரியிலிருந்து சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.8 கோடி இழப்பு ஏற்பட்டதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தது.
இதன் அடிப்படையில், எ.வ.வேலு மற்றும் அவரது மகன் குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, தங்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால், எ.வ.வேலுவுக்கு எதிராக அத்தகைய நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சீனா செல்ல அனுமதி... நீதிமன்றம் விதித்த நிபந்தனை!
இந்த வழக்கு தொடர்பான விசாரணை அக்டோபர் 16-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குமரனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை அக்டோபர் 20 முதல் 29-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், சீனாவில் நடைபெறும் மருத்துவக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக அக்டோபர் 21 முதல் 28-ம் தேதி வரை வெளிநாடு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. அக்டோபர் 28-ம் தேதி இந்தியா திரும்புவதாகக் குமரன் அளித்த உத்தரவாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், அவரது மனைவியின் பாஸ்போர்ட்டை உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, எ.வ.வேலு மற்றும் குமரன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஏற்கெனவே நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குமரன் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருப்பது இந்த வழக்கில் கவனம் பெற்றுள்ளது.
LIVE 24 X 7









