விளையாட்டு

"ஒரு பேரே வரலாறு.." 600-வது டெஸ்டில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி!

இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கி 600 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 3-வது அணி என்ற வரலாற்று மைல்கல்லை சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எட்டியுள்ளது.


IND vs SL
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், நாட்டின் 80-வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று களமிறங்கியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 போட்டிகளில் விளையாடிய 3-வது அணி என்ற வரலாற்று மைல்கல்லை இந்திய கிரிக்கெட் அணி எட்டியுள்ளது. இங்கிலாந்து (1097 போட்டிகள்) மற்றும் ஆஸ்திரேலியா (883 போட்டிகள்) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா இச்சாதனையைப் படைத்துள்ளது.

இந்தியாவின் டெஸ்ட் பயணம் 1947-ல் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, 1932-ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சி.கே.நாயுடு தலைமையில் இங்கிலாந்திற்கு எதிராகத் தொடங்கியது. முதல் 100 டெஸ்ட் போட்டிகளை எட்ட 35 ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில், அதன் பிறகு இந்தியாவின் டெஸ்ட் பயணம் வேகம் கண்டது. 400-வது (2006), 500-வது (2016) மற்றும் தற்போதைய 600-வது (2026) டெஸ்ட் போட்டிகளைத் தலா 10 ஆண்டுகளில் இந்தியா கடந்துள்ளது.

இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1952-ல் சென்னையில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. தொடர்ந்து 1968-ல் நியூசிலாந்திற்கு எதிராகத் தனது முதல் வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிப் பயணத்தைத் தொடங்கியது.

சொந்த மண்ணில் வலிமையான அணியாக உருவெடுத்த இந்தியா, காலப்போக்கில் தனது வெற்றி விகிதத்தை கணிசமாக உயர்த்தியது. விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, ரோகித் சர்மா முதல் தற்போதைய கேப்டன் சுப்மன் கில் வரை பல தலைமுறைகளின் பங்களிப்பால் இந்தியா உலகின் முன்னணி டெஸ்ட் அணியாக உயர்ந்துள்ளது.

இதுவரை விளையாடியுள்ள 599 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 186 வெற்றிகளையும், 188 தோல்விகளையும், 224 டிராகளையும், 1 டை-யையும் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் குவித்த அணிகளின் வரிசையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

முன்னதாக 300-வது (தென் ஆப்பிரிக்கா), 400-வது (வெஸ்ட் இண்டீஸ்), மற்றும் 500-வது (நியூசிலாந்து) மைல்கல் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. தற்போது சுப்மன் கில் தலைமையில் காலே மைதானத்தில் தொடங்கும் இந்த 600-வது டெஸ்ட் போட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைவதோடு, இத்தொடரை 2–0 எனக் கைப்பற்றினால் இந்தியாவின் வெற்றி-தோல்வி கணக்கு சமநிலையை (188 வெற்றிகள் - 188 தோல்விகள்) எட்டும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.