அரசியல்

அதிமுக ஆட்சிக்கு திமுக ஆதரவா? அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு திமுக ஆதரவா? அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் அவசர ஆலோசனை!
MK Stalin
தமிழக அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லாததால் ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இதற்கிடையே, "118 உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிமுக மற்றும் திமுக இணைந்து வந்தால் ஆட்சி அமைக்க அனுமதிப்பேன்" என்று ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய விவாதம்

இந்தச் சூழலில், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டி.ஆர். பாலு, கே.என். நேரு, பொன்முடி, ஆ. ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட திமுகவின் மிக முக்கிய மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பது குறித்தும், அதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அரசியல் விளைவுகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாகப் பேசப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடும் எதிர்பார்ப்பும்

மறுபுறம், தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களது உயர்மட்டக் குழு கூட்டங்களை நடத்தி வருகின்றன. முன்னதாக, ஜனாதிபதி ஆட்சியைத் தவிர்க்க தவெக-விற்கு ஆதரவு அளிக்குமாறு ஸ்டாலின் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது திமுகவின் இந்தத் திடீர் அவசர ஆலோசனை தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மர்மத்தை உண்டாக்கியுள்ளது.