இந்தியா

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு ஷாக்.. அலட்சியம் காட்டிய Flipkart-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிளிப்கார்டில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு எண்ணெய் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி.. நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து, சுமார் ரூ.1.80 லட்சம் இழப்பீடாக பெற்றுள்ளார்.

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு ஷாக்.. அலட்சியம் காட்டிய Flipkart-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Consumer forum directs refund and compensation over wrong product delivery by Flipkart
ஐபோன் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்குத் தாடி வளர்க்கும் எண்ணெயை அனுப்பிய விவகாரத்தில், பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் மற்றும் அதை விற்பனை செய்த வணிகர் ஆகிய இருவரும் சேர்ந்து வாடிக்கையாளருக்கு ரூ.1.11 லட்சத்தை வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும், ரூ.70,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மும்பை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை பவாய் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,11,793 மதிப்பிலான 'ஆப்பிள் ஐபோன் 14 புரோ' போனை தவணை முறையில் (EMI) ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு வந்த பார்சலைத் திறந்து பார்த்தபோது, போனுக்குப் பதிலாகத் தாடி வளர்க்கும் எண்ணெய் பாட்டில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு பலமுறை புகாரளித்தும், நிறுவனம் எவ்வித தீர்வும் வழங்காமல் புகாரை "முடிவடைந்தது" (Resolved) எனத் திரும்பத் திரும்ப மூடி வந்தது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், வாடிக்கையாளரின் புகாரைச் சரிவர விசாரிக்காமல் அலட்சியம் காட்டியது சேவைக்குறைபாடு மற்றும் தவறான வணிக நடைமுறை எனச் சுட்டிக்காட்டியது. பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பிறகு ஆன்லைன் வணிகத் தளங்கள் தங்களின் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்:

ஐபோனுக்காகச் செலுத்தப்பட்ட ரூ.1,11,793 தொகையை 9 சதவீத வட்டியுடன் வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் மற்றும் விற்பனையாளர் 'இன்டர்நேஷனல் வேல்யூ ரீடெய்ல்' இணைந்து திருப்பி அளிக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50,000 மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.20,000 ஆகியவற்றை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

இவ்வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்டிருந்த ஆப்பிள் இந்தியா நிறுவனம், ஆன்லைன் விற்பனை மற்றும் பார்சல் பேக்கிங் நடவடிக்கைகளில் தங்களுக்கு எந்தப் பங்கோ கட்டுப்பாடோ இல்லை எனத் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நுகர்வோர் நீதிமன்றம், இந்தச் சம்பவத்தில் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் மீது எந்தத் தவறும் இல்லை எனக் கூறி, அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.