இந்தியா

மோடி அரசுக்கு புதிய தலைவலி... வேலையின்மை விகிதம் திடீர் அதிகரிப்பு !

இந்தியாவின் வேலையின்மை விகிதம் மே 2026-ல் 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த 11 மாதங்களை விட மிக உயர்ந்த அளவாகும்.

மோடி அரசுக்கு புதிய தலைவலி... வேலையின்மை விகிதம் திடீர் அதிகரிப்பு !
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாக வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (PLFS) அறிக்கையின்படி, நாட்டின் வேலையின்மை விகிதம் மே 2026-ல் 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இது 5.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ள நபர்களின் எண்ணிக்கையை பிரதிபலிக்கும் வேலை பங்கேற்பு விகிதம் (WPR), ஏப்ரல் மாதத்தில் 52.2 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் 51.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 11 மாதங்களில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.

மேலும், பணிபுரிவோர் மற்றும் வேலை தேடுபவர்களை உள்ளடக்கிய தொழிலாளர் பங்கேற்பு விகிதமும் (LFPR) 55 சதவீதத்திலிருந்து 54.4 சதவீதமாக சரிந்துள்ளது. இதுவும் 11 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச நிலையாகும்.

இந்த புள்ளிவிவரங்கள் தொழிலாளர் சந்தையில் மந்தநிலை ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. வேலை தேடுவோரின் எண்ணிக்கை குறைந்தாலும், வேலைவாய்ப்புகள் அதைவிட வேகமாகச் சுருங்கியிருப்பதே வேலையின்மை விகிதம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “தொழிலாளர் பங்கேற்பு மற்றும் வேலை பங்கேற்பு விகிதங்களில் ஏற்பட்ட சரிவு, தொழிலாளர் சந்தை மென்மையடைந்ததைக் காட்டுகிறது. மே மாதத்தில் பொருளாதார நடவடிக்கைகளில் காணப்பட்ட பருவகால மந்தநிலையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.
இது இந்திய இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.