சினிமா

NEET: "தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்"- மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு!

நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.

NEET:
Actress Joythika
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு நடிகை ஜோதிகா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் போராட்டக் குழுவினர் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இக்கூட்டத்தில், போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்றும், நீட் விவகாரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், கல்வி அமைச்சரின் ராஜினாமா விஷயத்தில் எவ்வித சமரசமும் இல்லை எனப் போராட்டக் குழுவினர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், இதுகுறித்த முடிவுகள் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

மாணவர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் சூழலில், நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் ஆதரவளித்துள்ளார்.

அதில், "மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். களத்தில் போராடும் மாணவர்களுடன் துணை நிற்கிறேன். நமது தேசத்தின் எதிர்காலத்திற்கும் ஆதரவாக நிற்கிறேன். நான் ஜனநாயக இந்தியாவிற்கு ஆதரவாக நிற்கிறேன். நான் சீர்திருத்தப்பட்ட கல்விக்கு ஆதரவாக நிற்கிறேன். சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே மற்றும் சௌரவ் தாஸ், ஒரு தாயாக எங்கள் குழந்தைகள் உங்களைப் போல வளர வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஜென் Z இளைஞர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியதற்கு பெருமைப்படுகிறேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, "நாம்தான் இந்தியா" என்பதை நிரூபித்துள்ளீர்கள். அழுத்தங்களையும் பயத்தையும் உடைத்தெறிந்ததற்கு நன்றி. எங்களை அச்சமின்றி பேசத் துணிவூட்டியதற்கு நன்றி. ஜெய் ஹிந்த்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.